கோலாலம்பூர், அக்டோபர்.31-
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தினருக்கு (OKU) பயனளிக்கும் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் (KTMB) இலவச பயண அனுகூலமான MyRailLife பயண அட்டை செயல்படுத்தப்பட்டது மூலம் மடானி அரசாங்கம் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
MyRailLife பயண அட்டை, இலவச பயணக் கட்டண உதவி மட்டுமல்ல, எந்தவொரு பின்னணியையும் பொருட்படுத்தாமல் மக்களின் பயண வசதியை உறுதிச் செய்வதில் மடானி அரசாங்கம், தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் சமூக நீதியின் அடையாளமாகும்.
2023 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தொடரப்பட்ட இந்தத் திட்டம், முதலாம் ஆண்டு முதல் 6 படிவம் வரையிலான பள்ளி மாணவர்களும் மாற்றுத்திறனாளிகளும் கேடிஎம் கொமுட்டர் ரயிலில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடம், கேடிஎம் வடக்கு தெற்கு வழித்தடம் மற்றும் ஷட்டல் முறையில் தீமோரான் கிம்மாஸ் – தும்பாட் கிம்மாஸ் வழித்தடம் ஆகியவற்றில் இலவச ரயில் பயணச் சேவையை வழங்குகிறது.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட மேலும் பல தரப்பினருக்கு இந்தப் பயண அட்டை அனுகூலத்தை அரசாங்கம் விரிவுப்படுத்தும் என்று வலியுறுத்தியிருந்தார்.
“கேடிஎம் கொமுட்டர் மற்றும் ஷட்டல் டிஎம்யு ரயில் சேவைகளுக்கான இலவச MyRailLife பயண அட்டை அனுகூலம், மாற்றுத் திறனாளி சமூகத்திற்கும், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் ஆறு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்படும். மக்கள் உண்மையிலேயே பொது வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதை உறுதிச் செய்வதற்கு மடானி அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இது விளங்குகிறது” என்று பிரதமர் கூறியிருந்தார்.
இது முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த பொருளாதார அணுகுமுறையாகும் என்பதற்கு தெளிவான சான்றாக வர்ணிக்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால், நாட்டின் வளர்ச்சியில் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக நல்வாழ்வு உயர்வும் இரண்டறக் கலந்துள்ளது.
பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை இந்த அனுகூலமானது, செலவுகளை மிச்சப்படுத்துவது மட்டுமல்ல. மாறாக, மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கான நம்பிக்கையை விதைப்பது மற்றும் துடிப்புடன் கலந்துரையாடலில் பங்கேற்பது ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது.
கிள்ளானைச் சேர்ந்த நான்காம் படிவ மாணவர் விமல்ராஜ் த/பெ சுப்பிரமணியம் கூறுகையில், இந்தப் பயண அட்டை தன்னைப் போன்ற மாணவர்கள் பள்ளிக்கு எளிதாகச் செல்வதற்கு மிகவும் உதவுகிறது என்கிறார்.
"நான் ஒவ்வொரு வாரமும் பயணக் கட்டணத்தைக் கேட்க வேண்டியிருந்தது. இப்போது எந்தச் சுமையும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் ரயிலில் பள்ளிக்குச் செல்ல முடிகிறது. MyRailLife எங்களைப் போன்ற மாணவர்களுக்கு உண்மையிலேயே பெரிதும் உதவுகிறது" என்று விமல்ராஜ் கூறுகிறார்.
பெற்றோர்களைப் பொறுத்தவரை இந்த பயண அட்டை மிகவும் அர்த்தம் பொதிந்துள்ளதாக உள்ளது. சிரம்பானில் பள்ளிக்குச் செல்லும் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாரான ரேவதி த/பெ ராஜன் கூறுகையில், MyRailLife பயண அட்டை, ஒட்டு மொத்தத்தில் ஒரு விவேகமான அனுகூலமாகும் என்கிறார்.
"ரொக்கப் பண உதவியை அரசாங்கம் வழங்கினால், அது விரைவாகச் செலவாகிவிடும். ஆனால் இந்தப் பயண அட்டை, ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாகப் பலன் தருகிறது. உண்மையிலேயே மடானி அரசாங்கத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், அது நடைமுறை ரீதியாகச் சிந்திக்கிறது” என்று ரேவதி குறிப்பிட்டார்.
அனைவரையும் உள்ளடக்கிய இந்தப் பயண வசதி மீது அரசாங்கம் செலுத்தியிருக்கும் கவனத்திற்கு மாற்றுத் திறனாளி சமூகத்தினரும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
கோலாலம்பூரில் பணிபுரியும் ஒரு மாற்றுத் திறனாளியான சிவனேஸ்வரன் த/பெ கோபால் கூறுகையில், இந்த அனுகூலமானது, தாம் வேலை செய்வதற்கும் சுயகாலில் நிற்பதற்கும் வழி ஏற்படுத்தியுள்ளது என்று விவரித்தார்.
"அரசாங்கம் எங்களை மறக்கவில்லை. MyRailLife - பயண அட்டையினால் போக்குவரத்து கட்டணத்தைப் பற்றி கவலைப்படாமல் நான் சொந்தமாக வேலைக்குச் செல்ல முடிகிறது. நாட்டின் குடிமகன் என்ற முறையில் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை மனதாரப் பாராட்டுகிறேன் என்று சிவனேஸ்வரன் தெரிவித்தார்.
இதனிடையே, ஈப்போவில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் கார்த்திகேயன் த/பெ முருகன் கூறுகையில் MyRailLife - பயண அட்டை இருப்பதால் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்குச் செல்ல முடிகிறது என்கிறார்.
“பயணக் கட்டணத்தைப் பற்றி யோசிக்காமலே பள்ளிக்கும் கூடுதல் வகுப்புகளுக்கும் நூலகத்திற்கும் செல்ல முடிகிறது. இதுதான் மலேசியா மடானியின் உணர்வு. மக்கள் முன்னேறுவதற்கு அரசாங்கம் உதவுகிறது” என்று கார்த்திகேயன் குறிப்பிட்டார்.
பட்டர்வொர்த்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளி ஆசிரியரான கீதா த/பெ மனோகரன் கூறுகையில், பொதுப் போக்குவரத்தை, நாட்டின் கல்வி முறையில் ஒரு பகுதியாகக் காணும் அரசாங்கத்தின் நடவடிக்கையை வெகுவாகப் பாராட்டினார்.
“எனது மாணவர்களில் பலர், இப்போது ரயிலைப் பயன்படுத்துவதால் பள்ளி நேரம் தொடங்குவதற்கு முன்னதாகவே அவர்களால் சீக்கிரம் வர முடிகிறது. இது உண்மையிலேயே பயனுள்ள மற்றும் மனிதாபிமானக் கொள்கைக்கு ஒரு சான்றாகும்” என்று கீதா தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கையில் மடானி கொள்கை எவ்வாறு மொழியாக்கம் செய்யப்படுகிறது என்பதற்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது MyRailLife - பயண அட்டை.
எனவே பட்ஜெட் என்பது வெறும் எண்களை மட்டும் சூழல்பட்டது அல்ல. மாறாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி சமூகத்தினரால் ஒவ்வொரு நாளும் உணரப்படும் மதிப்பு வாய்ந்த அனுகூலமாகும்.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் கீழ் இந்த முயற்சி தொடர்வதன் மூலம் நாட்டின் தேசிய வளர்ச்சி என்பது கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. மாறாக, சமநிலையான, நியாயமான அனைவரையும் உள்ளடக்கிய மக்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் போக்குவரத்து நடமாட்டம் ஆகியவற்றினாலும் அளவிடப்படுகிறது என்பதை மடானி அரசாங்கம் நிரூபிக்கிறது.








