ஜார்ஜ்டவுன், நவம்பர்.03-
தித்திக்கும் தீபாவளி திருநாளைக் கொண்டாடும் விதமாக பினாங்கு ஜசெக தீபாவளி திறந்து இல்ல உபசரிப்பு சன்ஷைன் சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது.

பினாங்கு ஜசெக தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாட்டு குழு தலைவரும் புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்ப்பால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் கலந்து சிறப்பித்தார்.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வை பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவுடன் இணைந்து ராம் கர்ப்பால் குத்துவிளக்கேற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங், கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக், மனிதவள அமைச்சரும் பினாங்கு ஜசெக தலைவருமான ஸ்டீவன் சிம், ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தரராஜு சோமு, பகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் உட்பட இன்னும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

பினாங்கு முதலமைச்சர் சோப் கோன் யோவ் பேசுகையில், மாநில ஜசெக.விற்கு மக்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு ஏற்ப மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பல மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள், மக்கள் பயன் பெறுவதை மாநில அரசு உறுதிச் செய்யும் என்றார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் 13 ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் பினாங்கு மாநிலத்தின் பல்வேறு மேம்பாடுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு மாநில அரசாங்கம் சார்பில் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.

இந்த மேம்பாட்டுத் திட்டங்களின் விபரக் குறிப்புகளை மாநில அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றார்.

அதே வேளையில் பினாங்கு மாநில மக்களின் நல்வாழ்வுக்காக மாநில அரசுக்கு, மத்திய அரசாங்கம் வலுவான ஆதரவை வழங்கி வருகிறது. இந்நிலையில் மக்களின் நலன் சார்ந்த அம்சங்களுக்கு பினாங்கு மாநில அரசு என்றென்றும் துணை நிற்கும், முன்னுரிமை வழங்கும் என்று சோவ் கோன் யோவ் தமது உரையில் குறிப்பிட்டார்.

பண்பாட்டு நிகழ்வுடன் நடைபெற்ற இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பல்லின மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.








