கோலாலம்பூர், அக்டோபர்.31-
2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் கீழ் மடானி அரசாங்கம் சும்பாங்கான் துனாய் ரஹ்மா (STR) மற்றும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா (SARA) ஆகிய மக்களுக்கான உதவித் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களின் நலன் மீது அது கொண்டுள்ள அக்கறையின் உறுதிப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 9 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்களுக்கு பயனளிக்கும் வகையில் மொத்தம் ரி.ம.15 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 இல் ரி.ம.13 பில்லியனுடன் ஒப்பிடும் போது அதிகமாகும்.
குறைந்த வருமான தரப்பினர் (பி40) ) மற்றும் குறைந்த வருமான நடுத்தர தரப்பினர் ( எம்.40 க்குக் கீழ்) ஆகியோர் குறிப்பாக, தற்போதைய வாழ்க்கைச் செலவின அழுத்தங்களை எதிர்கொள்வதில் அவர்களுக்கு விரிவான சமூகப் பாதுகாப்பைப் பெறுவதை உறுதிச் செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிபாட்டை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது.
குடும்பம் மற்றும் தனி நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண உதவிக்கு அப்பாற்பட்ட நிலையில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் சாரா திட்டத்தின் வாயிலாக கூடுதலாக ரி.ம.100 சிறப்பு ஊக்கத் தொகையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்படும்.
பதிவாகியிருக்கும் எஸ்.டி.ஆர் மற்றும் சாரா உதவித் திட்டங்கள் அடிப்படையில் அனைத்து இனத்தவர்களுக்கும் மொத்த ஒதுக்கீட்டில் ஒரு பெரிய அதிகரிப்பை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மலாய்க்கார பெறுநர்களுக்கு 2022 இல் வழங்கப்பட்ட ரி.ம. 4.5 பில்லியனுடன் ஒப்பிடும் போது இத்தொகை 2025 இல் ரி.ம.7.1 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சபா மற்றும் சரவாக்கில் உள்ள பூமிபுத்ரா பெறுநர்களுக்கும் ரி.ம.1.9 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. (2022 இல் ரி.ம.1.1 பில்லியனுடன் ஒப்பிடும்போது ) அதே வேளையில் இந்திய பெறுநர்கள் ரி.ம. 1 பில்லியனைப் பெற்றுள்ளனர். இது முன்பு ரி.ம.0.6 பில்லியனாக இருந்தது.
எந்த இனமும் ஓரங்கட்டப்படவில்லை என்பதற்கு மடானி அரசாங்கத்தின் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைக்கு இது சான்றாகும். "எந்தவொரு குடிமகனும், அவரின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், தேசிய வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்க உரிமை உண்டு" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பணி ஓய்வு பெற்ற பெற்றவரான கோலாலம்பூரை சேர்ந்த 68 வயது திரு. நாக பஞ்சு கூறுகையில் எஸ்.டி.ஆர். உதவியானது, ஆபத்து அவசர வேளைகளுக்கு உதவக்கூடிய ஒரு நிதி அரணாக மாறியுள்ளது என்கிறார்.
"நான் என் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறேன். என் மனைவி எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள சந்தையில் காலை சிற்றுண்டிக் கடையை நடத்தி வருகிறார். எங்கள் வருமானம் சாப்பிடுவதற்கு போதுமானது. ஆனால், எஸ்.டி.ஆர், நிதி உதவி பெற்றதிலிருந்து மருத்துவச் சிகிச்சை செலவுகள் போன்ற அவசரத் தேவைகளுக்கு நான் கொஞ்சம் சேமிக்க முடிந்தது. உண்மையிலேயே இந்த நிதி உதவி இல்லையென்றால், நான் கடனில் சிக்க வேண்டியிருக்கும்" என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார் நாக பஞ்சு.
மற்றொரு பெறுநரான சிலிம் ரிவரைச் சேர்ந்த பெல்டாவில் பணி ஓய்வு பெற்ற 74 வயது என். பிரபாகரன், ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். அவர் கூறுகையில், எஸ்.டி.ஆர். நிதி உதவி, தனது வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைத்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.
“ஒரு சிறிய ஓய்வூதியம் பெறுகிறேன். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் எனது மாத வருமானத்தில் பாதி தொகை மருத்துவத்திற்காகச் செலவிட வேண்டியுள்ளது. எஸ்.டி.ஆர். உண்மையில் மருந்து மற்றும் பிற அன்றாடத் தேவைகளுக்கான செலவை ஈடுகட்ட உதவுகிறது. இது எனக்கு மன நிம்மதியைத் தருகிறது. மேலும் மடானி அரசாங்கம் எங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் குறித்து இன்னமும் அக்கறை கொண்டிருப்பதைப் பாராட்டுகிறேன்” என்று பிரபாகரன் கூறினார்.
ஈப்போவில் உள்ள ஓர் உணவகப் பணியாளரான 36 வயது திரு. ஹட்சன் தாஸ் கூறுகையில் தாம் வேலையை இழந்த போது எஸ்.டி.ஆர். நிதி உதவி, ஓர் உயிர்காப்பாளராக விளங்கி வருகிறது என்றார்.
"எனது வேலை நிரந்தமானது அல்ல. சில நேரங்களில் உணவகம் மூடப்படும், எனக்கு வருமானம் இல்லை. எஸ்.டி.ஆர். நிதி உதவி சமையல் பொருட்களை வாங்க எனக்கு உதவுகிறது. நெருக்கடியான நேரத்தில் என் பிள்ளைகள் வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிச் செய்யும் பாதுகாப்பு அரணாக இந்த நிதி உதவி உள்ளது " என்று நன்றி பெருக்குடன் ஹடச்ன் தாஸ் குறிப்பிட்டார்.
ஈப்போவைச் சேர்ந்த எழுத்தாளர் 78 வயது திரு. மலாக்கா முத்துகிருஷ்ணன் கூறுகையில் எஸ்.டிஆர். நிதி, நிறைய உதவி செய்தாலும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப உதவியின் மதிப்பு இருப்பதற்கு இந்தி நிதி உதவி மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"பணி ஓய்வுக்குப் பிறகும் நான் எழுதி வருகிறேன், ஆனால் எனது மருத்துவச் செலவுகள் மற்றும் தண்ணீர், மின்சாரம் போன்ற பயன்பாட்டு பில் கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தச் செலவுகளில் சிலவற்றை ஈடுகட்ட எஸ்.டி.ஆர். உதவுகிறது. ஆனால் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால், அதன் மதிப்பு குறைந்து வருகிறது. இந்த உதவி மக்களின் சுமையை உண்மையிலேயே குறைக்கும் வகையில் அரசாங்கம் எஸ்.டி.ஆர். நிதி உதவி விகிதத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்" என்று மலாக்கா முத்துகிருஷ்ணன் விளக்கினார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்சிப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கவும், மலேசிய மடானி நிகழ்ச்சி நிரலின் மூலம் அரசாங்கம் பல்வேறு இலக்குக்குரிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது கருணையின் அடிப்படையிலான சாரா நிதி உதவித் திட்டமாகும்.
சாரா நிதி உதவி என்பது வெறும் பண உதவி மட்டுமல்ல. தொற்றுநோய் பரவலுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியில், சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருப்பவர்களும் நியாயமான வாய்ப்பு அனுகூலங்கள் பெறுவதை உறுதிச் செய்வதற்கான அரசாங்கத்தின் மாபெரும் வியூகத்தின் ஒரு பகுதியாகும்.
எஸ்.டி.ஆர். மற்றும் சாரா திட்டங்கள், மக்களின் நல்வாழ்வு மற்றும் மலேசிய மடானி கட்டமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இலக்குக்குரிய பொருளாதாரக் கொள்கைகளின் செயல்திறன் குறித்த அரசாங்கத்தின் அக்கறையை நிரூபிக்கின்றன.
இது வெறும் நிதி உதவி மட்டுமல்ல. மாறாக மக்களின் நல்வாழ்வு மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதிச் செய்வதற்காக சமூக நீதி மற்றும் பொருளாதாரக் கருணையை ஒன்றிணைத்து செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதற்குச் சான்றாகும்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் எஸ்.டி.ஆர் மற்றும் சாரா போன்ற உதவித் திட்டக் கொள்கைகள், பொருளாதார வளர்ச்சியை, மனித மதிப்பீடுகளிலிருந்து பிரிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன. இந்த அணுகுமுறை மலேசியா மடானியை வெறும் சுலோக முழக்கமாக மட்டுமல்லாமல், அது உண்மையை எடுத்துக் காட்டும் மெய்மையாகும். இது நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரை இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை உணரப்பட்டது.
செலவிடப்படும் ஒவ்வொரு ரிங்கிட்டும் மக்களின் நல்வாழ்வு, சமூக நீதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வடிவத்தில் வருமானத்தைக் கொண்டு வருவதை உறுதிச் செய்வதில் மடானி அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதன் மூலம் கருணையும் நீதியும் மலேசியா வளர்ச்சியின் உண்மையான அடிப்படையாகும்.








