ஜார்ஜ்டவுன், ஜனவரி.24-
தாம் அரசியலில் காலடி எடுத்து வைத்த போதே, பிறை தொகுதியின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாத்து ஆதரவு வழங்குவதை தமது முக்கிய இலக்காகக் கொண்டிருந்ததாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினரமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

அந்த வகையில், பிறை வாழ் இந்திய சமூகத்தின் அடையாளமாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிறை தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தை மேம்படுத்த நிர்வாகத்தினர் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக டத்தோ ஶ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் 4 லட்சம் ரிங்கிட் செலவில் மண்டபத்தை மட்டும் சீரமைக்கத் திட்டமிட்டோம்; ஆனால், அதன் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருதி, சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான டான் ஶ்ரீ ரமேஷ், ஆலோசனையின் பேரில், சுமார் 17 லட்சம் ரிங்கிட் செலவில் ஆலயத்தை முழுமையாகப் புனரமைத்து மிக பிரம்மாண்டமாக மாற்ற முடிவு செய்தோம் என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
அண்மையில், டான் ஶ்ரீ ரமேஷ் அவர்களுடன் இணைந்து ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்ட டத்தோ ஶ்ரீ சுந்தராஜு, கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் மிகச் சிறப்பாகவும் திட்டமிட்டபடியும் நடைபெற்று வருகின்றன.

இப்புனரமைப்புப் பணிகள் அனைத்தும் வரும் மார்ச் 2026 இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புனிதமான மகா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் ஏப்ரல் 2026-இல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு விவரித்தார்.

இந்தத் திருப்பணி வெற்றி என்பது வெறும் கட்டிட மேம்பாடு மட்டுமல்ல, இது நம் பிறை மக்களின் ஒற்றுமைக்கும் கலாச்சார பாரம்பரியத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். மதம் கடந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களின் நலன்களையும் காப்பதில் தாம் என்றும் உறுதியாக இருப்பதாக டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.
மேலும் நமது சமூகத்தின் நல்லிணக்கத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் தாம் தொடர்ந்து உழைக்கப் போவதாகவும், அன்னை மாரியம்மனின் அருளைப் பெறவும், இந்த மகிழ்ச்சியான தருணத்தை ஒன்றிணைந்து கொண்டாடவும் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.








