கோலாலம்பூர், ஜனவரி.29-
பத்துமலை தைப்பூச விழாவில் கடை ஒதுக்கீட்டில் நிலவிய குளறுபடிகளைக் களைந்து வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவே, 'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' முறைக்கு மாற்றாக இந்த ஆண்டு ஏல முறை அல்லது Bidding System அறிமுகப்படுத்தப்பட்டதாக செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் ஷாமான் ஜலாலுடின் விளக்கமளித்துள்ளார்.
210 இடங்களுக்கு 800-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததால் ஏற்பட்ட கடுமையான போட்டியே ஏலத் தொகை அதிகரிக்கக் காரணம் என அவர் ஒப்புக் கொண்டார். எனினும் இதில் உள்ள பலவீனங்களை மேம்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாக திசைகளுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார்.
தைப்பூச கடைகளுக்கான இந்த ஏல முறையில் முறைகேடுகள் நடப்பதாகவும் அல்லது நகராண்மைக் கழகமான அதிகாரிகள் இதில் தொடர்பு கொண்டிருப்பதாகவும் எழுந்துள்ள புகார்களை ஷாமான் ஜலாலுடின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
செலாயாங் நகராண்மைக் கழகத்தின் ஊழியர்கள் மற்றும் பொது அதிகாரிகள் யாரும் இந்த ஏலத்தில் பங்கேற்கவோ அல்லது வியாபாரம் செய்யவோ சட்டப்படி அனுமதி இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஏலத் தொகை 4,000 முதல் 18,000 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்துக் குறிப்பிடுகையில், இது பொதுமக்களுக்கு இடையிலான வெளிப்படையான போட்டி என்றும், இதில் அதிகாரிகள் யாரும் தலையிடவில்லை என்றும் அவர் உறுதியளித்தார். இருப்பினும், ஏதேனும் குறிப்பிட்ட புகார்கள் இருந்தால் அது குறித்து விசாரணை நடத்தத் தயாராக இருப்பதாகவும் ஷாமான் ஜலாலுடின் தெரிவித்தார்.








