Sep 22, 2026
Thisaigal NewsYouTube
நிச்சயமற்ற உலக சூழலில்… குடும்பங்களைக் காக்கும் பாதுகாப்பு வலை
சிறப்பு செய்திகள்

நிச்சயமற்ற உலக சூழலில்… குடும்பங்களைக் காக்கும் பாதுகாப்பு வலை

Share:

உலகின் பல பகுதிகளில் நீடித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருள் விநியோக நெருக்கடி, சாதாரண மக்களின் குடும்பச் செலவுகளில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டது.

குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, உணவு, சமையல் எண்ணெய், பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும், மின்சாரம் மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பும் மாதாந்திர வரவு-செலவு திட்டத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

மலேசியாவிலும் உலகளாவிய அதிர்வுகளின் தாக்கம் முற்றிலும் இல்லாமல் போய்விடவில்லை. ஆனால், இலக்கு வைக்கப்பட்ட உதவிகள், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகக் கண்காணிப்பு, விலை கண்காணிப்பு மற்றும் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் மூலம் அந்த அழுத்தத்தை ஓரளவு தணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகளாவிய நெருக்கடி என்பது எண்ணெய் விலை உயர்வுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. எரிபொருள் விலை உயரும்போது போக்குவரத்து மற்றும் தளவாடச் செலவுகள் அதிகரிக்கலாம். அதனால் விவசாய உற்பத்தி, உணவுப் பதப்படுத்தல், விநியோகம் மற்றும் இறுதியில் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையிலும் தாக்கம் ஏற்படலாம்.

இதனால்தான் பொருளாதார நிபுணர் டாக்டர் நுங்சாரி அகமட் ராதி, தற்போதைய சவால்,  விலை உயர்வை மட்டும் பற்றியது அல்ல; அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைச் சிறப்பாக நிர்வகிப்பதும், வெளிநாட்டு வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் முக்கியம் என்று கூறியுள்ளார்.

கோழி, முட்டை போன்ற சில அடிப்படை உணவுப் பொருட்களின் விநியோகம் தற்போது போதுமானதாக இருந்தாலும், போக்குவரத்து மற்றும் தளவாடச் செலவுகள் அதிகரித்தால் அதன் தாக்கம் பொருளாதாரத்தின் பல துறைகளுக்கும் பரவக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், உள்நாட்டு உணவு உற்பத்தித் திறனை வலுப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் நுங்சாரி வலியுறுத்தியுள்ளார். நீண்டகாலத்தில் உலகளாவிய விநியோகத் தடைகளை எதிர்கொள்ள நாட்டின் பொருளாதாரத் தாங்குதிறனை அதிகரிக்க இது அவசியம் என அவர் கூறுகிறார்.

 

இதற்கிடையே, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, கோழி, முட்டை, காய்கறிகள், மீன், பால், பழங்கள் உள்ளிட்ட முக்கிய உணவுப் பொருட்களின் கையிருப்பும் கண்காணிக்கப்படுகிறது. விலையேற்றத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதே முக்கிய நோக்கம் என அரசாங்கம் கூறியுள்ளது.

குடும்பங்களின் மாதாந்திர செலவைக் குறைப்பதில் இலக்கு வைக்கப்பட்ட உதவிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அவற்றில் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா எனப்படும் SARA உதவி, தகுதியுடைய குறைந்த வருமானக் குடும்பங்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தக்கூடிய உதவியாகும். இது மைகாட் மூலம் பங்கேற்கும் கடைகள் மற்றும் பேரங்காடிகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவு, சமையல் எண்ணெய், முட்டை, மாவு, ரொட்டி உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களுடன் தனிநபர் மற்றும் வீட்டு சுகாதாரப் பொருட்களையும் வாங்குவதற்கான வசதி இதில் உள்ளது.

ஆனால், இந்த உதவி அனைத்து குடும்பச் செலவுகளையும் முழுமையாக ஈடுகட்டும் என்று கருத முடியாது.

போம்கா எனப்படும் மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைமைச் செயலாளர் டாக்டர் டி. சரவணன் கூறுகையில், SARA போன்ற உதவிகள் குடும்பங்களின் நிதிச்சுமையை ஓரளவு குறைக்கின்றன என்றாலும், குறிப்பாக பெரிய குடும்பங்களுக்கும் நகர்ப்புறங்களில் அதிக செலவுகளைச் சந்திக்கும் குடும்பங்களுக்கும் உதவித் தொகை போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், அன்றாட உணவுச் செலவில் இறைச்சி, மீன், கோழி, காய்கறிகள் போன்ற புதிய உணவுப் பொருட்களுக்கு கணிசமான தொகை செலவிடப்படுவதால், இத்தகைய உதவிகள் ஈரச் சந்தைகள் மற்றும் சிறு வணிகர்களிடமும் பயன்படுத்தக்கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதோடு, விலைக் கண்காணிப்பும் முக்கியம். உதவி கிடைத்தாலும், அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நியாயமற்ற முறையில் உயர்ந்தால் அந்த உதவியின் உண்மையான பயன் குறைந்துவிடும். எனவே விநியோகச் சங்கிலி மற்றும் சந்தை விலைகளைக் கண்காணிப்பதும் அவசியமாகிறது.

 

மலேசிய இந்திய குடும்பங்களுக்கும் இதே நிலைதான். குறைந்த வருமானத்தில் வாழும் ஒரு குடும்பத்தில் அரிசி, சமையல் எண்ணெய், பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மாதச் செலவு சிறிய அளவில் அதிகரித்தாலும், அது குடும்பத்தின் மொத்த வரவு-செலவு சமநிலையை பாதிக்கலாம். அதேவேளை நகர்ப்புறம், சிறுநகரம், கிராமப்புறம் என வாழும் இடத்தைப் பொறுத்தும் குடும்பங்களின் செலவுத் தேவைகள் மாறுபடுகின்றன.

அதனால் உதவித் திட்டங்கள் இருப்பது மட்டுமே போதாது. யார் தகுதியுடையவர்கள், எவ்வாறு விண்ணப்பிப்பது, எங்கு பயன்படுத்துவது, என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன என்பதையும் மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

இதற்காக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தளங்களைப் பயன்படுத்துவது முக்கியம். போர்டல் இஹ்சான் மடானி போன்ற மூலம் வருமானம், உணவு, சுகாதாரம், கல்வி, வீடு, போக்குவரத்து மற்றும் பயன்பாட்டுச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கிடைக்கும் உதவிகளைத் தனிநபர் தகுதிக்கு ஏற்ப தேடிப் பார்க்க முடியும்.

அதே நேரத்தில், குடும்பங்களின் பொறுப்பும் குறையவில்லை.

உலகளாவிய விநியோக நெருக்கடி நீண்ட காலம் நீடிக்கக்கூடிய சூழலில், எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது, தேவையற்ற பொருட்களை வாங்காமல் இருப்பது, உணவு வீணாவதைத் தவிர்ப்பது, மாதாந்திர செலவுகளை முன்கூட்டியே திட்டமிடுவது ஆகியவை குடும்பங்களின் நிதிச்சுமையை ஓரளவு கட்டுப்படுத்த உதவும்.

போம்காவும், பயனீட்டாளர்கள் பீதியடைந்து அதிகமாகப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து, தேவைக்கு முன்னுரிமை கொடுத்து பொறுப்புடன் செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

உலகளாவிய நெருக்கடி எப்போது முழுமையாக முடிவடையும் என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலையில், அரசாங்கத்தின் உதவிகள் ஒரு பாதுகாப்பு வலையாக இருக்கலாம். ஆனால் அது முழுமையான பாதுகாப்பு அல்ல.

அரசாங்கத்தின் இலக்கு வைக்கப்பட்ட உதவிகள், அத்தியாவசியப் பொருட்களின் விநியோக மேலாண்மை, விலை கண்காணிப்பு ஆகியவற்றுடன் மக்களின் விழிப்புணர்வும் சிக்கனமான பயன்பாடும் இணைந்தால்தான் குடும்பங்களின் மீது ஏற்படும் அழுத்தத்தை நீண்டகாலத்தில் குறைக்க முடியும்.

நெருக்கடி முடிந்துவிட்டது என்று நினைப்பதற்கான காலம் அல்ல இது. நெருக்கடியை எதிர்கொள்ளத் தயாராக வேண்டிய காலம்.

Related News