எஸ்பிஎம் பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள இந்து மாணவர்களின் கல்வி வெற்றிக்காக, ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடா இடைநிலைப் பள்ளி சார்பில் சிறப்பு ஆன்மீக மற்றும் ஊக்கமளிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் ஆன்மீக மற்றும் நற்பண்புப் பிரிவும், நன்னெறிக் கல்விப் பணித்தியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ‘எஸ்பிஎம் ஆன்மீக ஒளி’ நிகழ்வு, புக்கிட் கெமுனிங் பத்து 8 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்றது.

இதில் அப்பள்ளியைச் சேர்ந்த 150 இந்து, படிவம் 5 மாணவர்கள் கலந்துகொண்டனர். கடின உழைப்புடன் இறை வழிபாடும் தன்னம்பிக்கையும் இணைந்தால் தேர்வில் நிச்சயம் சாதனை படைக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில், சிறப்புப் பிரார்த்தனை மற்றும் தேவாரப் பாடல்கள் இடம் பெற்றன.

தொடர்ந்து, மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கி, அவர்களுக்கு மன வலிமையையும் தன்னம்பிக்கையையும் ஊட்டும் வகையில் டாக்டர் சுமதி அவர்களின் சிறப்பு ஆன்மீக உரை நிகழ்த்தப்பட்டது.

மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு, பள்ளியின் மாணவர் நலப் பிரிவு துணைத் தலைமை ஆசிரியர் திருமதி ராஜேஸ் அவர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் செயலவை உறுப்பினர் திரு. சந்திரன் அவர்களும் இந்நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

இறையருளுடன் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுற்றது.








