ஷா ஆலாம், நவம்பர்.02-
சிலாங்கூர், கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு, நேற்று சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் முன்னிலையில் ஷா ஆலாம், தாமான் ஶ்ரீ மூடா, ஜாலான் மெஸ்ராவில் இரவு 7 மணிக்குத் தொடங்கி 10 மணி வரை நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வருகையாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். தீபாவளி என்பது வெறும் ஒளி தரும் விழா மட்டும் அல்ல. இருளை அகற்றி நன்மை, நம்பிக்கை, வெற்றியை குறிக்கும் நன்னாளாகும் என்றார்.

எதிர்காலத்தில் ஏற்படகூடிய சவால்களைச் சமாளிக்கக்கூடிய ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று இந்த தீபாவளித் திருநாளில் உறுதிக் கொள்ளும் அதே வேளையில் கோத்தா கெமுனிங் தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவையில் தொகுதியில் இந்திய சமூகம் சார்ந்த மேம்பாடு மற்றும் நலன்களை வலுப்படுத்துவதில் தம்முடன் இணைந்து ஒத்துழைப்பு நல்கி வரும் பள்ளிகள், குடியிருப்பாளர்கள் சங்கங்கள், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு பிரகாஷ் தமது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

மக்களிடைய கட்டிக் காக்கப்பட்டு வரும் ஒற்றுமை உணர்வு தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரகாஷ், மக்களின் ஒற்றுமையும், நல்லிணக்கமே நாட்டின் வளப்பத்திற்கு அடித்தளம் என்றார்.

அறுசுவை உணவுடன் ஆடல், பாடல், நடனம் என பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பில், பள்ளிகளின் பிரதிநிதிகள், அரசு சாரா இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், நினைவுப் பரிசுகளை வழங்கினார்.








