பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.23-
மனநலத்திற்கும் நல்வாழ்விற்கும் உறுதுணையாக அதே வேளையில் அது தொடர்பான பிரச்னை, சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு வழிகாட்டுகிறது அரசு சாரா இயக்கமான சுவாரா மிண்டா.
ஒவ்வொருவரின் மனோநிலையிலும் மன நலத்திலும் களங்கம் இல்லாத சூழல் ஏற்பட சமூகத்தின் ஆதரவு மிக முக்கியம் என்கிறார் சுவாரா மிண்டா அமைப்பின் தோற்றுநர், தலைவர் விசாலாட்சி அருணகிரி.
மனநல குறைபாடுகள் உள்ள நபர்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதிலும் சுவாரா மிண்டா போராடி வருகிறது. சுருங்கச் சொன்னால், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மன நல பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல விழிப்புணர்வுக்கான பாதையை ஒளிரச் செய்கிறது சுவாரா மிண்டா.

மக்களின் மனநலம் பேணும் மையமாக, அடைக்கலம் புகும் நிவாரணியாக விளங்குகிறது எங்கள் சுவாரா மிண்டா என்கிறார் விசாலாட்சி.
உலக மனநலத் தினத்தை முன்னிட்டு வழங்கிய பேட்டியில் விசாலாட்சி இவ்வாறு விவரித்தார்.
மனோவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், எங்கள் மனநல மையத்திற்கு வருவதுதான் பாதுகாப்பான இடம் என்கிறார் விசாலாட்சி.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப வாழ்வில் தனிமையை நாடுகின்றவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோருக்கு இந்த மையம் உறுதுணையாக இருக்கிறது என்கிறார் மலேசிய சுகாதார அமைப்பின் உதவித் தலைவரும், சுவாரா மிண்டாவின் செயற்குழு உறுப்பினருமான திருமதி மாலாதேவி.
அவர்களின் சின்ன சின்ன சந்தோஷமே எங்களுக்கு முக்கியம். அவர்கள் உடல் நலத்துடன் மட்டும் அல்ல, மனோரீதியாகவும் நலமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு உதவுவதே சுவாரா மிண்டா அமைப்பின் பிரதான நோக்கமாகும் என்றார் மாலாதேவி.








