மலேசியாவில் உள்ள எழுத்தாளர் இயக்கங்களும் சங்கங்களும் எழுத்தாளர் உறுப்பிய தகுதியைத் திருத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. இப்போதைய பொதுவான நடைமுறைபடி எழுத்தாளர் இயக்கங்களில் உறுப்பினராக தகுதி பெற பத்திரிகைகளில் அல்லது அச்சு ஊடகத்தில் வெளிவந்த தங்களின் இரண்டு அல்லது மூன்று படைப்புகளை உறுப்பினர் விண்ணப்பப்பாரத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். இயக்க செயற்குழுவினர் அதனை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட பிறகே அந்த எழுத்தாளர் இயக்கத்தில் உறுப்பினராகும் தகுதியைப் பெறுவார். இந்த சட்டதிட்டம் இப்போதைய சூழலுக்கும் எதிர்கால சூழலுக்கும் ஏற்றதாக இருக்காது. செயற்கை நுண்ணறிவுவோடு மின்னியல் ஊடகங்கள் இப்போது நிறைய வந்துவிட்டன.
பல பத்திரிகைகள் இப்போது இல்லாத நிலையில் சில பத்திரிகைகள் மட்டுமே நமது நாட்டில் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. அதில் வாரம் ஒரு முறைதான் எழுத்தாளர்களின் சிறுகதை, தொடர்கதை, கவிதையோடு பல படைப்புகள் வெளிவருகின்றன. எல்லா எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தைப் பூர்த்தி செய்யாத நிலையில் பல எழுத்தாளர்கள் குறிப்பாக இளம் எழுத்தாளர்கள் இப்போது மின் ஊடகத்திற்கு மாறிவிட்டனர். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினால்தான் எழுத்தாளர் வாசக இயக்கங்கள் தொடர்ந்து செயலாற்றமுடியும். எனவே சட்டதிட்டத்தில் அச்சு ஊடகத்தோடு மின்னியல் ஊடகத்தில் எழுத்தும் எழுத்தாளர்களும் இயக்கத்தில் சேரும் தகுதையைப் பெறுவர் என இப்போதைய சட்டதிட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும் என கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத் தலைவர் முனைவர் க. உதயகுமார் கேட்டுக்கொண்டார்.
கெடா மாநிலத் தமிழ் இயக்க உறுப்பினர் ஏகமனதாக இந்த புதிய சட்டத் திருத்தத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டனர்.
கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் 54வது ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று, கெடா சுங்கை பட்டாணி, எஸ்.பி.கிளப்பில் சிறப்பாக நடைப்பெற்றது. இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் தௌஃபிக் ஜோஹாரி அவர்களின் சுங்கைபட்டாணி சேவை மையத்தின் இந்தியர் உதவி பிரிவிலிருந்து தமிழரசு அவர்கள் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டார்.
வரவேற்புறையில் இயக்கத்தின் ஓராண்டு கால செயல் திட்டங்களும், ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் செயலாளர் காந்தி முருகன் அவர்கள் தெளிவுப்படுத்தினார். டாக்டர் உதயகுமார் அவர்களின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பேசினார்.
இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளர்கள் வருகைத் தந்து ஒத்துழைப்பு நல்குமாறு முனைவர் க. உதயகுமார் கேட்டுக் கொண்டார். இயக்கத்திற்கான சொந்தக் கட்டிடம் இல்லாத சூழல்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் பேசினார். தொடர்ந்து கெடா மாநில எழுத்தாளர்கள் ஐவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. முனைவர் மாரி சச்சிதானந்தம், கோ.புண்ணியவான், தமிழ் மணி மா. அம்பிகாபதி, இல. பெருமாள், கே. பாலமுருகன் ஆகியோருக்கு சிறப்பு பிரமுகரால் சிறப்பு செய்யப்பட்டது. திரு தமிழரசு அவர்களின் உரையில் எழுத்தாளர் இயக்கத்தின் நிதி கோரிக்கையை விரைவில் செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் காலத்திற்கேற்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.














