Sep 12, 2026
Thisaigal NewsYouTube
50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
சிறப்பு செய்திகள்

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

Share:

15 ஆண்டுகளுக்கு மேலாக தையல் கலையில் ஈடுபட்டு குடும்ப வருமானத்தை பெருக்கு வரும் 50 பெண்களுக்கு தையல் நாயகி விருது வழங்கி கௌரவித்தது விமர்சகன் மீடியா.

பாரதி கண்ட புதுமை பெண்களாக திகழும் இவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தையல் நாயகி 2.0 எனும் விருது வழங்கும் நிகழ்ச்சி கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் விமரிசையாக நடந்து முடிந்தது.

கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், விலாயா, பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகிய 8 மாநிலங்களில் இருந்து இவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக்குழுத் தலைவரும், விமர்சகன் மீடியா இணைய ஊடகத்தின் தோற்றுநருமான எஸ்.பி.சரவணன் தெரிவித்தார்.

விருது பெற்றவர்களில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தப்படியே இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தையல் கலையை கற்றுக் கொண்டு சுயத்தொழில் நடத்தி வரும் இவர்களின் திறமைக்கு ஓர் அங்கீகாரமாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.

பல ஆண்டுகள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்தின் வெளிப்பாடக விருது பெற்றவர்கள் அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தென்பட்டது.

இது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். பல்லாயிரம் பேருக்கு பலவிதமான உடைகளை தைத்து கொடுத்த போது இருந்த மகிழ்ச்சியை விட இன்றைய மகிழ்ச்சி இரட்டிப்பாக இருப்பதாக 46 ஆண்டுகள் தையல் கலையில் அனுபவம் கொண்ட ஜொகூர்பாருவைச் சேர்ந்த திருமதி ஜெயலட்சுமி தெரிவித்தார்.

இதே விருது விழாவில், 70ஆண்டுகளாக தையல் துறையில் ஈடுபபட்டு வரும், சுங்கைபட்டாணியை சேர்ந்த 90 வயது மூத்தவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள்சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தனது இரண்டு மகள்கள் திருமதி கலைவாணி, திருமதி வேணி, பேத்தி திருமதி கவிதா ஆகியோரும் தையல் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னையர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்தாண்டு தையல் நாயகி விருது பெற்றவர்களால் அணிச்சல் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை அழகிய தமிழில் சிறப்பாக வழிநடத்தி பலரின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றார் ஆசிரியை தமிழ்வாணி கருணாநிதி.


Related News