Oct 19, 2025
Thisaigal NewsYouTube
“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது
சிறப்பு செய்திகள்

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

Share:

ஒவ்வொரு கனவும் ஒரு வாய்ப்பிலிருந்து தொடங்குகிறது. Malaysian Indian Skills Initiative (MISI) மூலம், மலேசியாவில் வாழும் இந்திய சமுதாயத்தினருக்கு புதிய வாழ்க்கைப் பாதையை அமைக்கும் திறன் பயிற்சியும் வேலை வாய்ப்பும் திறக்கப்பட்டுள்ளது.

MISI என்பது சாதாரண திட்டமல்ல — அது திறமைக்கும் சாதனைக்கும், கனவுக்கும் நனவுக்கும் இடையிலான ஒரு பாலம்.

HRD Corp, Talent Corp போன்ற அமைப்புகளின் மூலம் செயல்படுத்தப்படும் இம்முயற்சி, திறன் பயிற்சி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

MISI-யின் உண்மையான வலிமை எண்களிலும், அறிக்கைகளிலும் இல்லை — அஃது இதன் பின்னால் இருப்பவர்களின் வெற்றிக் கதைகளில் தான் உள்ளது.

அதுவே MISI-யின் நோக்கமும் முயற்சியும் — இம்முயற்சி அவர்களின் கைகளுக்கு வேலை செய்ய கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல, அவர்களின் தன்னம்பிக்கை, மரியாதை, எதிர்காலத்தையும் கட்டியெழுப்புகிறது.

கதை 1: “என் முதல் சம்பளம் அம்மாவுக்காக”

தனது தந்தை விபத்தில் சிக்கி வேலை செய்ய முடியாமல் போன பிறகு, பிரவின் ராஜ் த/பெ முரளிதரன் தனது குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியிருப்பதை உணர்ந்தார்.

“அம்மா தனியாளாக வேலை செய்து வந்தார். அவரை ஒவ்வொரு நாளும் சோர்வாகப் பார்க்கும் போது, நான் கண்டிப்பாக அவருக்கு உதவுவேன் என நான் எனக்குள் ஒரு வாக்குறுதி எடுத்துக் கொண்டேன்” என்கிறார்.

இளம் பட்டதாரியான பிரவின் சில மாதங்கள் வேலை இன்றி இருந்தார். ஆனால் MISI திட்டத்தில் இணைந்த பிறகு அவரது வாழ்க்கை மாறியது.

அவர் தகவல் தொழில்நுட்ப துறையில் Software Developer Programme என்ற பயிற்சியில் கலந்து கொண்டு, தொழில்துறைக்கு தேவையான உண்மையான திறன்களைக் கற்றுக் கொண்டார்.

பயிற்சி முடிந்த சில காலத்திலேயே, பிரவின் DELL Global Business Centre Sdn. Bhd. நிறுவனத்தில் Software Engineer ஆக மாதம் 5,100 ரிங்கிட் சம்பளத்துடன் வேலையில் சேர்ந்தார்.

“அந்த நாள் வேலை கிடைத்த உடனே நான் அம்மாவை அழைத்தேன். அவர் அழுதார் — ஆனால் இந்த முறை மகிழ்ச்சியால்,” என்று சிரித்தபடி கூறுகிறார் பிரவின்.

இப்போது பிரவின் தனது குடும்பத்திற்கு உதவுவதோடு மட்டுமல்ல, சரியான வாய்ப்பு மற்றும் பயிற்சி ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்ற முடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

கதை 2: குறைபாடுகள் படைப்பாற்றலுக்குத் தடையாக இருந்ததில்லை

சிறுவயதிலிருந்தே கவினேஷ் த/பெ ஸ்ரீமுருகன் ஒரு அமைதியான உலகத்தில் வாழ்ந்தார். பிறவியிலேயே கேட்கும் திறன் குறைபாடுடன் பிறந்ததால், தகவல் தொடர்பு என்பது அவருக்கு அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் அந்த அமைதிக்குப் பின்னால், புகைப்படங்கள், வீடியோக்களின் வழியாக அவர் தன்னை வெளிப்படுத்தும் இன்னொரு வழியை கண்டுபிடித்தார்.

“நான் புகைப்படம் எடுக்கும் போதோ அல்லது வீடியோ எடிட்டிங் செய்யும் போதோ, எனக்கு ஒரு சுதந்திர உணர்வு வருகின்றது,” என்று லேசான புன்னகையுடன் கூறுகிறார் கவினேஷ். “நான் இசையை கேட்க முடியாது, ஆனால் அதன் ‘இசையின் ரிதத்தை’ காட்சிகளின் வழியாக உணர முடிகிறது.” என்கிறார்.

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு நண்பர்களுடன் வேலை தேடிக் கொண்டிருந்த கவினேஷ், MISI திட்டத்தில் இணைந்து AI-Powered Photography & Visual Editing: Transforming Creativity with Advanced Tools and Techniques என்ற பாடநெறியைத் தேர்ந்தெடுத்தார்.

இந்த பாடநெறியின் மூலம், அவர் புகைப்படம், வீடியோ எடிட்டிங்கில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றார். இதன் மூலம், இன்று அவர் ஒரு டிஜிட்டல் கலைஞராகவும் உள்ளடக்க உருவாக்குநராகவும் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.

கவினேஷுக்கு, AI அடிப்படையிலான புகைப்படம், காட்சித் தொகுப்பு பயிற்சி அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் திறந்தது. முதல் முறையாக, அவர் தனது குறைபாடு ஒரு தடையல்ல — ஒரு தனித்துவம் என்பதை உணர்ந்தார்.

இன்று, கவினேஷ் தனது தனித்துவமான படைப்புகளுக்காக பலரால் அறியப்பட்ட டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சராக (digital influencer) மாறியுள்ளார். அதை விட முக்கியமானது — அவரைப் போன்ற மாற்றுத் ஈறூஆளாஈ இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளார்.

“இந்தப் பயிற்சி என் வாழ்க்கையை மாற்றியது. நான் இப்போது அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன், சுயமாக எதையும் செய்து கொள்ளும் ஒருவனாகவும் இருக்கிறேன். நானும் வெற்றி பெற முடியும் என்பதை இப்போது நம்புகிறேன்,” என்று பெருமையுடனும் புன்னகையுடனும் கூறுகிறார் கவினேஷ்.

கதை 3: திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள், எதிர்காலத்தை உருவாக்குங்கள்

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்ற பிறகு, 24 வயதான ரவிதிரா த/பெ ராஜா ஒரு கடினமான காலத்தை எதிர்கொண்டார்.

“இரண்டு மாதங்கள் வேலை இன்றி இருந்தேன். நான் படித்ததற்கேற்ற ஒரு வேலை கிடைக்குமா?” என ஒவ்வொரு நாளும் நான் யோசிப்பேன் என்று அந்நாட்களை நினைவு கூர்கிறார் ரவிதிரா.

சிலாங்கூர் மாநிலத்தின் பூச்சோங் பகுதியில் வசிக்கும் B40 குடும்பத்தைச் சேர்ந்த ரவிதிராவின் குடும்ப வருமானம் மாதம் சுமார் 2,000 ரிங்கிட் முதல் 4,000 ரிங்கிட் வரை தான். அதனால் உடனடியாக வேலை பெற வேண்டிய அழுத்தம் எப்போதும் அவருக்கு இருந்தது.

ஆனால் ரவிதிரா வெறும் வேலை மட்டும் தேட விரும்பவில்லை — ஒரு வாழ்க்கைத் தொழிலை உருவாக்க விரும்பினார்.

அந்த வாய்ப்பு அவர் மனிதவள அமைச்சிதின் (KESUMA) கீழ் நடைபெறும் MISI 2.0 திட்டத்தில் இணைந்தபோது கிடைத்தது. அவர் Knowledge.com நிறுவனம் நடத்திய Microsoft Full Stack Developer Programme-ல் கலந்து கொண்டு, நிரலாக்க மொழிகள், டிஜிட்டல் அமைப்பு உருவாக்கம் போன்ற திறன்களை அடிப்படையிலிருந்து மேம்பட்ட நிலை வரை கற்றார்.

அந்தப் பயிற்சி அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

“முன்பு நான் பெரிய நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க தயங்கினேன் — நான் போதுமான திறமை இல்லையென நினைத்தேன். ஆனால் இந்தப் பாடநெறிக்குப் பிறகு, எனக்கு தன்னம்பிக்கை வந்தது. நான் போட்டியிட முடியும் என்று உணர்ந்தேன்,” என்று கூறுகிறார் ரவிதிரா.

சில மாதங்களுக்குப் பிறகு, அந்த நம்பிக்கை நிஜமானது.

இப்போது ரவிதிரா Bestinet Sdn. Bhd. நிறுவனத்தில் Full Stack Developer ஆக மாதம் 4,700 ரிங்கிட் சம்பளத்துடன் பணியாற்றுகிறார் — ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரிக்கு இது மிகப் பெரிய சாதனை.

ரவிதிராவுக்கு, இந்த வெற்றி முதல் வேலை கிடைத்த மகிழ்ச்சியைத் தாண்டி நிற்கிறது — இது ஒவ்வொரு சிறிய தொடக்கமும் ஒரு பெரிய இலக்கை நோக்கி செல்லும் தைரியத்தின் சின்னமாகும்.

கதை 4: நம்பிக்கை ஒரு வாய்ப்பிலிருந்து தொடங்குகிறது

MISI திட்டத்தில் சேர்வதற்கு முன், கலையரசன் த/பெ கருணாநிதிக்கு வாகனத் துறையில் எந்தவொரு அனுபவமும் இருந்ததில்லை. ஆனால் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் புதியவற்றை முயற்சிக்க வேண்டும் என்ற மனதோடும் அவர் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் MISI முயற்சியின் ஒரு பகுதியாக, அவர் Automotive Car Detailing Technician Level 2 (TVET Programme) என்ற பாடநெறியில் கலந்து கொண்டார்.

அதன் மூலம் தொழில்நுட்ப திறன்கள், தொழில்முறை கருவிகளைப் பயன்படுத்தும் முறைகளையும் Paint Protection Film (PPF) பொருத்தும் நுட்பங்களையும் கற்றார்.

இன்று கலையரசன், Prestige Detailing 63 நிறுவனத்தில் Car Detailing Technician ஆக முழுநேரப் பணியில் இருக்கிறார். அவர் உயர்நிலை வாடிக்கையாளர்களுக்காக வாகன டீட்டெய்லிங், PPF பொருத்தும் பணிகளைச் செய்கிறார்.

“MISI-க்கு முன் எனக்கு வாகனத் துறையில் அனுபவமே இல்லை. ஆனால் இந்தப் பயிற்சிக்குப் பிறகு, நான் தொழில்துறை அங்கீகாரம் பெற்ற சான்றிதழும், ஒரு தொழில் உருவாக்கும் தன்னம்பிக்கையும் பெற்றேன். இப்போது இந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்,” என்று கலையரசன் கூறுகிறார்.

சரியான வாய்ப்பும் பயிற்சியும் கிடைத்தால், சுழியத்தில் இருக்கும் யாரும் தங்கள் வாழ்க்கையைப் புதிய உயரத்திற்குக் கொண்டுச் செல்ல முடியும் என்பதை கலையரசனின் கதை நிரூபிக்கிறது.

கதை 5: B40 குடும்பத்தின் மகளின் கனவு நனவானது

புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்த மதுமிதா த/பெ சைமன், வயது 26, இயந்திரம், உற்பத்தி பொறியியல், மேலாண்மை துறையில் பட்டம் பெற்றார். ஆனால் பட்டம் பெற்ற பின், அவர் இரண்டு மாதங்கள் வேலை இன்றி இருந்தார்.

மாத வருமானம் 3,000 முதல் 4,000 ரிங்கிட் வரையுள்ள B40 குடும்பத்தைச் சேர்ந்த மகளான மதுமிதா தன் குடும்பத்துக்கு உதவுவதற்காக ஒரு பெரிய வாய்ப்பு தேவை என்பதை நன்றாக அறிந்திருந்தார்.

அந்த வாய்ப்பு அவருக்கு மனிதவள அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட MISI மூலம் கிடைத்தது.

இத்திட்டத்தின் கீழ், மதுமிதா KISMEC நிறுவனம் நடத்திய Front End Wafer Fabrication Process Programme-ல் கலந்து கொண்டார். அந்தப் பயிற்சியில் அவர் தொழில்நுட்ப அறிவை மட்டும் அல்லாமல், ஒரு தொழில்முறை ஊழியராக தன்னம்பிக்கையையும் வளர்த்தார்.

பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்ற சில வாரங்களிலேயே, மதுமிதாவுக்கு Jabil Circuit Sdn. Bhd. நிறுவனத்தில் EIT ME Engineer பதவியில் மாதம் 3,550 ரிங்கிட் சம்பளத்துடன் வேலை கிடைத்தது.

“இந்த வாய்ப்பு நான் மிகவும் குழப்பத்திலிருந்த நேரத்தில் எனக்குக் கிடைத்தது. இந்தப் பயிற்சி எனக்கு திறன்களையும், புதிய துவக்கத்திற்கான தன்னம்பிக்கையையும் அளித்தது,” என்று நன்றியுடன் கூறுகிறார் மதுமிதா.

சரியான வாய்ப்புகளும் பயிற்சிகளும் இருந்தால், எந்தக் கனவையும் அடைய முடியும் என்பதற்குச் சான்றாக இருக்கும் மதுமிதா, பல கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்”

இவர்கள் அனைவரும் 2025-ஆம் ஆண்டில் மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் இரண்டு முக்கிய நிறுவனங்களான HRD Corp, Talent Corp வழியாக பயிற்சி பெற்ற 1,500 MISI பயிற்சியாளர்களில் ஒரு பகுதியாக இருக்கின்றனர்.

அரசு முழுமையாக ஆதரிக்கும் MISI (Malaysian Indian Skills Initiative) திட்டம், உயர்தர திறன் பயிற்சியையும் வேலை வாய்ப்பையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது — குறிப்பாக மின்னியல் & மின்னூட்டவியல் (E&E), தகவல் தொழில்நுட்பம் (IT), செயற்கை நுண்ணறிவு (AI) , இணையப் பாதுகாப்பு போன்ற மூலதனத் துறைகளைப் பரிந்துரைக்கிறது.

இத்திட்டத்தின் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் தங்களின் முதல் வேலை வாய்ப்பை 2,000 ரிங்கிட் முதல் 6,000 ரிங்கிட் வரையிலான மாதச் சம்பளத்துடன் பெற்றுள்ளனர்.

மனிதவள அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவன் சிம் MISI குறித்து பேசும் போது:

“MISIயின் நோக்கம் திறன் பயிற்சியளித்து, அவர்களின் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கையை மாற்றத்தை உறுதிச் செய்வதே ஆகும். நாம் வெறும் தூண்டிலைக் கொடுப்பதோ, வலை கொடுப்பதோ அல்ல — அவர்களுக்கு ஒரு வேகமான படகையும் கொடுக்கிறோம், இதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள முடியும்” – என்றார்.

“இந்திய சமுதாயத்திற்கு சின்னச் சின்ன உதவிகளை மட்டும் வழங்கி வந்தது போதும். இனி அவர்களின் வாழ்க்கையையும், ஒரு முழு தலைமுறையையும் உயர்த்த வேண்டும்” என்றும் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

Related News

கேமரன்மலை,  தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

கேமரன்மலை, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்