கோலாலம்பூர், அக்டோபர்.18-
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அமனா இக்தியார் மலேசியா முன்மொழிந்த உணவு கூடை திட்டத்திற்கான 5 லட்சம் நிதி ஒதுக்கீட்டை மித்ரா அங்கீகரித்துள்ளது.
இந்த நிதி உதவியானது, B40 பிரிவைச் சேர்ந்த 5,000 பயனாளர்களுக்கு உணவு கூடை வடிவில் வழங்கப்படவுள்ளது.
இது, சமூக நலன் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் ஒரு முக்கிய ஆதரவாகக் கருதப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 19, 2025 தேதியிட்ட கடிதத்தில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முதன்மை தனிச் செயலாளர் ஷாரோல் அனுவார் சார்பான், இந்த நிதியை ஒதுக்குமாறு மித்ரா தலைமை இயக்குநர் ஜி. பிரபாகரனிடம் கோரிக்கை வைத்திருந்தார் என்பதை மலேசியாகினி உறுதிப்படுத்தியுள்ளது.
மித்ரா மற்றும் அமானா இக்தியார் மலேசியா இணைந்து செயல்படுத்தும் இத்திட்டம், தீபாவளி திருநாளின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும், சமூக ஒருமைப்பாட்டின் ஒரு வடிவமாகும் என்றும், இந்த முயற்சி மடானி அரசின் சமூகக் கொள்கைகளை பிரதிபலிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.