Nov 14, 2025
Thisaigal NewsYouTube
ஒரு மாதம், இலட்சக்கணக்கானப் பயனர்கள்: மைகார்டு மூலம் பெட்ரோல் சுமையைக் குறைத்த 'பூடி மடானி' திட்டத்தின் தொடக்க நிலை வெற்றி!
சிறப்பு செய்திகள்

ஒரு மாதம், இலட்சக்கணக்கானப் பயனர்கள்: மைகார்டு மூலம் பெட்ரோல் சுமையைக் குறைத்த 'பூடி மடானி' திட்டத்தின் தொடக்க நிலை வெற்றி!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாத காலத்திற்குள், பூடி மடானி RON95 (BUDI95) திட்டம் மலேசிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது, 'மலேசியா மடானி' கட்டமைப்பின் கீழ் அரசாங்கம் அறிமுகப்படுத்திய இலக்கு வைக்கப்பட்ட மானிய அணுகுமுறையின் செயல்திறனை நிரூபித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், தகுதியுள்ள பயனர்கள் தங்கள் மைகார்டைப் பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்தும் போதே குறைந்த விலையில் எரிபொருளைப் பெற முடிகிறது; பணமாகவோ அல்லது பணப் பரிமாற்றத்திற்காகவோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு பயனாளியும் மாதத்திற்கு 300 லிட்டர் பெட்ரோல் வரை மானியத்தைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த அணுகுமுறை, தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே உதவி கிடைப்பதை உறுதிச் செய்வதுடன், வெளிப்படையான, திறமையான, நியாயமான மானிய முறைக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. இது முந்தைய ரொக்க உதவி முறையை விட மிகவும் எளிதானது என்று பல பயனர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மைகார்டை ஸ்கேன் செய்யும் ஒவ்வொரு முறையும், மானிய விலை தானாகவே கழிக்கப்பட்டு, பம்பிலேயே உடனடி சேமிப்பை வழங்குகிறது.

மக்களின் குரல்: "மானியம் உண்மையிலேயே எங்களுக்குக் கிடைக்கிறது"

1. கருணாகரன் (65, இ-ஹைலிங் ஓட்டுநர், சிலாங்கூர்): "நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை பெட்ரோல் நிரப்புவேன். இந்தத் திட்டம் தொடங்கிய போது, என்னால் உடனடியாக வித்தியாசத்தை உணர முடிந்தது. மைகார்டைப் பயன்படுத்தும் போது, விலைகள் உடனே குறைகின்றன. வங்கிக் கணக்கில் உதவி வரக் காத்திருக்கவோ அல்லது சிக்கலான படிவங்களை நிரப்பவோ தேவையில்லை. ஒரு மாதத்திற்கு ரிம80-க்கும் அதிகமாகச் சேமிக்க முடிகிறது. இது என்னைப் போன்ற ஓட்டுநருக்குப் பெரிய விஷயம்."

2. கே. பரிமளா (45, உணவு வியாபாரி, ஜோகூர்): "நான் தினமும் காலையில் உணவு விநியோகம் செய்கிறேன், அதனால் அதிக பெட்ரோல் தேவைப்படும். பூடி மடானி வந்தவுடன், மைகார்டைப் பயன்படுத்தத் தொடங்கினேன். ஒவ்வொரு முறை பெட்ரோல் நிரப்பும் போதும் தள்ளுபடி கிடைக்கிறது. எனது செலவுகளை என்னால் குறைக்க முடிந்தது, அதனால் நான் உணவு விலையை உயர்த்த வேண்டியதில்லை. இந்த முறை நடைமுறைக்கு ஏற்றது—எந்தவிதமான நிர்வாகச் சிக்கலும் இல்லாமல் உதவியைப் பெற முடிகிறது."

3. ஜெஸ்ஸி (45, தாய், பினாங்கு): "நான் என் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், வேலைக்குச் செல்லவும் சிறிய காரைப் பயன்படுத்துகிறேன். மைகார்டைப் பயன்படுத்தும் போது விலை குறைவாக இருப்பதை நான் காண்கிறேன். இந்தப் பணம் வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுகிறது. நீண்ட காத்திருப்பு இல்லை. பெட்ரோல் நிரப்பும் போது உடனடியாகப் பலன் கிடைப்பதால், ஒரு நிம்மதியான உணர்வு கிடைக்கிறது."

4. சிவக்குமார் (46, தொழிலாளி, சிலாங்கூர்): "நான் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துகிறேன். வேலைக்குச் சென்று வரத் தூரம் அதிகம். வாரத்திற்கு இரண்டு முறை பெட்ரோல் போடுவேன். மைகார்டை ஸ்கேன் செய்தவுடன் மானிய விலை வருகிறது. ஒரு மாதத்தில் RM60 முதல் ரிம70 வரை சேமிக்க முடிகிறது. என்னைப் போன்ற தொழிற்சாலை ஊழியர்களுக்கு இது மிகவும் உதவுகிறது."

5. ரெதாம் (61, பணி ஓய்வு பெற்றவர், சிலாங்கூர்): "எனக்கு செயலிகளையோ அல்லது இ-வாலட்களையோ பயன்படுத்தத் தெரியாது. ஆனால் இப்போது எனது மைகார்டை, மானிய விலையில் பெட்ரோல் நிரப்பப் பயன்படுத்த முடிகிறது. இது மிகவும் எளிதானது. நான் இப்போது யாருடைய உதவியையும் நாட வேண்டியதில்லை. இது பண ரீதியாக மட்டுமல்ல, என்னைப் போன்ற முதியவர்களை அரசாங்கம் நினைவில் வைத்திருக்கிறது என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது."

நிதி அமைச்சின் கூற்றுப்படி, ஒரு மாத காலத்திற்குள் 11 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பூடி மடானி RON95 (BUDI95) திட்டத்தில் பலன்களைப் பெற ஒப்புதல் அளித்துள்ளனர். சராசரி மானியப் பயன்பாடு மாதத்திற்கு சுமார் 250 லிட்டர் ஆகும். இஃது உதவி அதன் நோக்கத்திற்காக முழுமையாகப் பயன்படுத்தப்படுவதைக் காட்டுகிறது.

இந்தத் திட்டம் நாட்டின் மானிய நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது கசிவுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் செலவுகளையும் சேமிக்கிறது. அதே நேரத்தில் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் தொடர்ந்து உரிய பாதுகாப்பைப் பெறுவதை உறுதிச் செய்கிறது.

அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு, பூடி மடானி RON95 (BUDI95) பொதுமக்களின் சுமையைக் குறைப்பதுடன், சமூகத்தின் உண்மையான தேவைகளுக்குப் பதிலளிக்கும் அரசாங்கத்தின் புதிய அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது. மைகார்டு மூலம் சேமிக்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலும், அரசாங்கம் மானியத்தை நியாயமான, துல்லியமான, பயனுள்ள முறையில் வழங்குவதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதன் நேரடிச் சான்றாகும்.

Related News