Aug 26, 2026
Thisaigal NewsYouTube
நெஞ்சுரத்தில் ஒரு சிகரம்
சிறப்பு செய்திகள்

நெஞ்சுரத்தில் ஒரு சிகரம்

Share:

தன்னம்பிக்கை, நெஞ்சுரம், பேச்சாற்றல், எதிர்த்து போராடும் போர்க் குணம், இதற்கு மேலாக மனித உரிமைப் போராட்ட வாதியாக விளங்கும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர், அம்பிகா ஶ்ரீனிவாசனுக்கு, கடந்த மே மாதம் 8 ஆம் தேதி, அனைத்துலக Ruth Bader Ginsburg எனும் உயரிய கௌரவ விருது வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அந்நாட்டு மன்னர் Felipe இந்த உயரிய விருதை அம்பிகாவிற்கு வழங்கி கௌரவித்துள்ளார். உலக நீதிபதிகள் அமைப்பினால், இந்த உயரிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 5 பெண்களில், மலேசியாவைச் சேர்ந்த அம்பிகாவும் ஒருவராவார்.

சட்ட உரிமைகள், பெண்கள் சமத்துவம் போன்றவற்றுக்கு போராடியதற்காகவும், இவர்களின் இத்தகைய போராட்டம், மற்ற பெண்களுக்கும் ஓர் உந்தும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த உலகளாவிய விருது அம்பிகா உட்பட 5 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

67 வயதை எட்டியுள்ள அம்பிகா , 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 13 ஆம் தேதி, சிரம்பானில் பிறந்தவர். 1974 ஆம் ஆண்டில், கோலாலம்பூர் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையை நிறுவி அதன் தலைவராகச் சேவை ஆற்றிய நாட்டின் முன்னணி சிறுநீரக மருத்துவ நிபுணர் டத்தோ டாக்டர் ஜி. ஸ்ரீநிவாசன் - விசாலாட்சி தம்பதியரின் புதல்வியாவார். அம்பிகாவின் தந்தை டாக்டர் ஸ்ரீநிவாசன், மருத்துவத் துறையில் பணியாற்றியக் காலக்கட்டத்தில், வசதி குறைந்தவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியவர்.

குறிப்பாக, ஏழை மக்களால் மருத்துவச் செலவுகளைச் செலுத்தமுடியாத பட்சத்தில், குறைந்த கட்டணத்தை விதிப்பது அவரின் பண்பாகும். அவரின் இந்த கருணையும் உதவும் மனப்பான்மையும் மக்கள் மத்தியில் அவர் மீதான பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.

அம்பிகாவின் தந்தைவழி தாத்தா, மலாயா ஆங்கிலேய ஆட்சியின் போது தொழிலாளர் துறையில் ஆணையராகப் பணிபுரிந்தவர். தாய்வழி தாத்தா ஆனந்த விகடன் வார இதழின் நிறுவனர் ஆவார்.
இத்தகைய பாரம்பரிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த அம்பிகா தன்னுடைய தொடக்கக் கல்வியையும், இடைநிலைக் கல்வியையும் கோலாலம்பூர், மாநகரில் மையப்பகுதியில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க புக்கிட் நானாஸ், கான்வெண்ட் பள்ளியில் பயின்றார்.

புக்கிட் நானாஸ், கான்வெண்ட் பள்ளியில் ஆறாம் படிவத்தில் பயின்ற போது, அப்பள்ளியின் தலைமை மாணவியாகவும் அம்பிகா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு தமது சட்டத் துறை கல்வியை, இங்கிலாந்தில் உள்ள முன்னணி உயர்க் கல்விக் கூடமான எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து, 1979 ஆம் ஆண்டு, சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு, கிரேய் இன்னில் உள்ள வழக்கறிஞர் மன்றத்தில் ஒரு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

லண்டனில் இரண்டு சட்ட நிறுவனங்களில் வழக்கறிஞராக சேவையாற்றியப் பின்னர், 1982 ஆம் ஆண்டு நாடு திரும்பிய அம்பிகா மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தில் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். வழக்கறிஞராக பணியாற்றிக்கொண்டே தம்முடைய சொந்த பெயரிலேயே வழக்கறிஞர் நிறுவனம் ஒன்றை நிறுவி, பெண் வழக்கறிஞர்கள் மத்தியில் ஒரு முன்னுதாரண வழக்கறிஞராக செயல்பட்டார்.

சட்டக் கல்வியில் தாம் ஆர்வம் ஏற்படுவதற்கும், அந்தத் தொழிலில் மேன்மை பெறுவதற்கும் தமது சிற்றப்பாவும், சட்ட நிபுணருமான மறைந்த கோபால் ஸ்ரீராம் ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளார் என்பதை பல சந்தர்ப்பங்களில் அம்பிகா நினைவுக் கூர்ந்துள்ளார்.

அம்பிகாவின் தந்தை டாக்டர் ஸ்ரீநிவாசன் தம்மை போலவே தமது மகள் அம்பிகாவையும் ஒரு மருத்துவராக பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான முயற்சியையும் எடுத்துக்கொண்டார். ஆனால், பள்ளியில் படிக்கும் போதே சட்டத் துறையில் பயில வேண்டும் எனும் தீரா ஆசை அம்பிகாவிற்குள் உருவாகிவிட்டது. அதுமட்டுமின்றி, தமது தந்தையின் சகோதரர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் சட்டத்துறையில் பணியாற்றிய வேளையில், சிறுவயது முதலே அவரிடமிருந்து சட்டம் தொடர்பான தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றதனால், அத்துறையின் மீதான ஆர்வம் மேலும் வளர்ந்து அம்பிகாவைச் சட்டக் கல்லூரியில் பயிலச்செய்தது.

சட்டத் துறையில் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருந்த அம்பிகா, 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு 3 ஆண்டுக்காலம் அதில் சேவையாற்றினார். அம்பிகாவின் வரவின் மூலம் மலேசிய வழக்கறிஞர் மன்றம் இரண்டாவது முறையாக ஒரு சிறந்த பெண்ணை தலைவராக பெற்றது வரலாற்றுப் பதிவாகும்.

நீதிபதிகள் நியமனத்தில் சில தனிநபர்களின் தலையிடும் செல்வாக்கும் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதித் துறை சீரமைக்கப்படவேண்டும் என்று கோரி மலேசிய வழக்கறிஞர் மன்றம் மூலமாக அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தம் கொடுத்து அதனை விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பெருமை அம்பிகாவையே சாரும்.

நாட்டின் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்று கோரி, தாம் தலைமையேற்ற பெர்சே இயக்கத்தின் வாயிலாக தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்ததன் விளைவாக தேர்தலில் வாக்களிக்கும் முறையில் விரலில் மையிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தகைய பெருமைகளுக்கு மத்தியில் அனைத்துக அளவிலும் ஒரு முன்னுதாரண பெண்மணியாக அம்பிகா விளங்கினார். இதற்கு தக்கச் சான்று 2009 ஆம் ஆண்டு அம்பிகாவிற்கு அமெரிக்க அரசாங்கம் துணிகர பெண்மணி என்ற விருது வழங்கி சிறப்பு செய்ததாகும்.

இதே போன்று 2011 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான Chevalier de Legion d’Honneur எனும் செவேலியர் விருதும் அம்பிகாவிற்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில், நான்காவது Commonwealth Rule of Law Award என்ற விருதையும் காமன்வெல்த் வழக்கறிஞர்கள் மன்றத்திடமிருந்து அம்பிகா பெற்றார்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் செயலாளராக அம்பிகா பொறுப்பேற்றிருந்த போது, அன்றைய சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஜாயிட் மூலமாக துன் அப்துல்ல அகமட் படாவி அரசாங்கத்தில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தினார்.

1988 ஆம் ஆண்டு துன் மகாதீர் முகமது ஆட்சியின் போது, நிகழ்ந்த நீதித் துறை நெருக்கடியில் அதிரடியாக நீக்கப்பட்ட நாட்டின் தலைமை நீதிபதி துன் சலே அபாஸ் உட்பட 5 நீதிபதிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2006 ஆம் ஆண்டில் அவர்களுக்கான ஓய்வூதியத் தொகை உட்பட பெரும் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தந்த பெருமை அம்பிகாவிற்கும் உண்டு.
இத்தகைய சிறப்பு மிக்க அம்பிகா தமது சேவைக் காலத்தில் பல சந்தர்ப்பங்களில் அம்பிகா கொலை மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார்.

ஆனால், எத்தகைய மிரட்டலுக்கும் , ஆளுமைக்கும், அதிகாரத்திற்கும் அஞ்சாமல் சவால் விடும் ஒரு சிங்கப் பெண்ணாகவே இன்றும் திகழ்கிறார் என்பதே நிஜம்.

- மாலதி சண்முகம்

Related News

பிரதமரின் கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பாகானில் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மின் சுடலை

பிரதமரின் கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – பாகானில் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் மின் சுடலை

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை