வெனிஸ், ஜூலை.16-
2026 ஆம் ஆண்டுக்கான மிலானோ-கொர்டினோ குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்களை அதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான வடிவில் காணப்படும் அப்பதக்கங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளன. அவை விளையாட்டு ஆர்வலர்களிடையே ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இத்தாலி, வெனிஸில் அப்பதக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பதக்கத்தின் முன் பகுதியில் ஐந்து வளையங்களுடன் கூடிய ஒலிம்பிக் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் போட்டியை விவரிக்கும் மற்றும் அப்போட்டி நடைபெறும் இடத்தை நினைவுகூரும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
இவ்வேளையில் தனிச் சின்னத்துடன் அதே வடிவமைப்பில் பாராலிம்பிக் போட்டிக்கும் பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 245 தங்கப் பதக்கங்கள், 245 வெள்ளி, 245 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.