கோலாலம்பூர், டிசம்பர்.21-
2025 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 231 பதக்கங்களை வேட்டையாடி வரலாற்றுச் சாதனைப் படைத்த மலேசியக் குழுவினருக்கு, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அவரது துணைவியார் பேரரசி ராஜா ஸாரித் சோஃபியா ஆகியோர் தங்களின் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். நம் நாட்டு வீரர்களின் விடாமுயற்சியையும் போராட்டக் குணத்தையும் கண்டு பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்ட மாமன்னர், இந்த வெற்றி இளைஞர்களுக்கு ஒரு சிறந்த ஊக்கமாக அமையும் என்றும் பாராட்டியுள்ளார்.
57 தங்கம் உட்பட நூற்றுக்கணக்கான பதக்கங்களுடன் மலேசியா பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ள நிலையில், இந்த வெற்றிக்குப் பின்னால் உழைத்த பயிற்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அரண்மனை நன்றி தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் இந்தப் போட்டிகள் கோலாகலமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த 2027-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பெருமை மலேசியாவிற்கு கிடைத்துள்ளதால் விளையாட்டு ஆர்வலர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.








