கோலாலம்பூர், நவம்பர்.24-
வங்கதேச கால்பந்தாட்ட லீக் போட்டிகளில் ஸ்பான்சர்களில் ஒருவராக இணைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் ஒன்றை தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ் மறுத்துள்ளது.
ஸ்பான்சர்ஷிப் தொடர்பான எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்பதையும், இந்த லீக் தொடர்பாக தங்களது பெயரையோ, முத்திரையையோ பயன்படுத்துவதற்கு யாருக்கும் அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதையும் பெட்ரோனாஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், தமது பெயரின் நம்பகத்தன்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள பெட்ரோனாஸ், பங்குதாரர்களுக்கும், மக்களுக்கும் சிறந்த சேவை வழங்குவதே தங்களது ஒரே குறிக்கோள் என்றும் வலியுறுத்தியுள்ளது.
வங்கதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பு என்ற பெயரிலான முகநூல் பக்கம் ஒன்றில் பெட்ரோனாஸ் குறித்த தகவல் பகிரப்பட்டு வந்ததையடுத்து, பெட்ரோனாஸ் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.








