கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
சிலாங்கூரில் நடைபெறவுள்ள சுக்மா 2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் நீக்கப்பட்டதன் காரணத்தால் ஏற்பட்ட விவாதங்கள் மற்றும் அது தொடர்பான விளையாட்டாளர்களின் கவலை தாம் கவனத்தில் கொண்டதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இது குறித்து, இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ, மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார், டத்தோ ஶ்ரீ அமிருடின் பின் ஷாரி ஆகிய இருவருடனும் இந்தப் பாரம்பரிய விளையாட்டின் அவசியம் குறித்து தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் கவலை தெரிவித்த பலரின் கருத்துக்களையும், வாதங்களையும் நான் அவ்விருவரிடமும் தெரிவித்தேன்.
மேலும் இந்த முடிவு மாற்றப்பட வேண்டும் என்றும் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், போட்டிகளில் இடம் பெற வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டை அவ்விருவரிடமும் விளக்கினேன்.
இந்தச் சர்ச்சை குறித்து இன்று அமைச்சரவைக் கூட்டத்திலும் நான் எனது நிலைப்பாட்டைத் தெரிவித்து விவாதித்தேன். இந்தப் பிரச்சனைக்கு விரைவில் நல்ல முடிவு காணப்படும் என நான் நம்புகிறேன் என்று கோபிந்த் சிங் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.