கோலாலம்பூர், ஜனவரி.07-
மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் 7 வெளிநாட்டுப் பாரம்பரிய ஆட்டக்காரர்களின் ஆவண மோசடி தொடர்பில், 45 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் அறிவித்துள்ளது.
இவ்விவகாரத்தில், மோசடி குற்றத்திற்காக, குற்றவியல் சட்டம், பிரிவு 420-இன் கீழ், விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதை கூட்டரசுப் பிரதேச வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இதுவரை எட்டு பேரிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவண மோசடி தொடர்பில், கடந்த வாரம், மலேசிய கால்பந்து சங்கமான ஃஎப்எஎம் பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது.
இந்த மோசடியின் பின்னணியில் உள்ள முக்கிய நபரைக் கண்டறிய போலீஸ் விசாரணை கோரப்பட்டுள்ளது.
அனைத்துலக கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவிடம் போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஃஎப்எஎம் பொதுச் செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








