ஹாங் காங், ஆகஸ்ட்.23-
சவுதி சூப்பர் கிண்ண கால்பந்து இறுதியாட்டத்தில் கோல் மன்னன் கிரிஸ்டியானோ ரொனால்டோ அல்-நாஸ்ருக்காக தனது 100வது கோலை அடித்தார். அல்-அஹ்லிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அக்கோலைப் புகுத்தினார். அதன் வழி ரொனால்டோ மற்றொரு வரலாற்று மைல் கல்லை எட்டினார்.
இருப்பினும் அந்த சவுதி அரேபிய கிளப்புடன் ரொனால்டோவுக்கு ஒரு கிண்ணத்தை ஈட்டித் தர அந்த கோல் போதுமானதாக இல்லை. ஏனெனில் சவுதி சூப்பர் கிண்ண இறுதியாட்டத்தில் அல்-அஹ்லியிடம் பெனால்டியில் அவர்கள் தோற்றனர்.
ரியல் மாட்ரிட் அணிக்காக 450 கோல்கள், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 145 கோல்கள் மற்றும் ஜுவென்டஸ் அணிக்காக 101 கோல்கள் அடித்த பிறகு, நான்கு வெவ்வேறு கிளப்புகளுக்காக 100 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்த வரலாற்றில் முதல் வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார்.
இந்த கோலுடன், 40 வயதான அவர், இப்போது தனது வாழ்க்கையில் 939 கோல்களைப் பெற்றுள்ளார். 1,000 கோல்கள் என்ற அவரது தனிப்பட்ட இலக்கை அடைய இன்னும் 61 கோல்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.