பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.24-
மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் 7 வெளிநாட்டுப் பாரம்பரிய ஆட்டக்காரர்களின் ஆவண மோசடி தொடர்பில் மலேசிய கால்பந்து சங்கமான ஃஎப்ஏஎம் இன்று பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளது.
இந்த மோசடியின் பின்னணியில் உள்ள முக்கிய நபரைக் கண்டறிய போலீஸ் விசாரணை கோரப்பட்டுள்ளது. அனைத்துலக கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவிடம் போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஃஎப்ஏஎம் பொதுச் செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரிடம் ஃபிஃபா விசாரணை நடத்தவுள்ளது.
முன்னாள் தலைமை நீதிபதி துன் முகமட் ராவுஸ் ஷாரிஃப் தலைமையிலான சுயேட்சை விசாரணைக் குழு, தனது 59 பக்க அறிக்கையில் இந்தப் போலி ஆவண விவகாரம் ஒரு கிரிமினல் குற்றம் என்பதால் போலீஸ் விசாரணை அவசியம் எனப் பரிந்துரைத்திருந்தது.
இவ்விவகாரம் தொடர்பில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டு இருப்பதை ஃஎப்ஏஎம் இடைக்காலத் தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் உறுதிப்படுத்தியுள்ளார்.








