புக்கிட் ஜாலில், நவம்பர்.19-
2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டியின் குழு நிலையிலான ஆட்டமொன்றில் மலேசியா, நேப்பாளத்தை 1-0 என்ற கோல்களில் தோற்கடித்தது. அவ்வெற்றியின் மூலம் குழுவில் ஐந்து ஆட்டங்களில் தோல்வியே காணாத நிலையை தேசிய அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
முற்பாதி ஆட்டத்தில் மலேசியா பல முறை கோலடிக்க முயன்றது. இருப்பினும் நேப்பாள அணி ஈடு கொடுத்து விளையாடியதால், தேசிய அணியின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனவே முற்பாதி ஆட்டம் கோலேதும் இல்லாமல் முடிவுற்றது.
சொந்த இடத்தில் விளையாடிய மலேசியா, பிற்பாதியிலும் தனது அபார ஆட்டத்தைத் தொடர்ந்தது. தொடர் முயற்சியின் காரணமாக ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் மலேசியா ஒரு கோலைப் புகுத்தியது. அந்த ஒரே கோலை ஃபைசால் ஹாலிம் அடித்து ஆட்ட நாயகனானார்.
இதுவரை முடிந்துள்ள ஆட்டங்களின் வழி 15 மொத்தப் புள்ளிகளைத் திரட்டியுள்ள மலேசியா, F குழுவில் முதலிடத்தில் உள்ளது. வியட்னாம், லாவோஸ், நேப்பாளம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.








