பயான் லெப்பாஸ், நவம்பர்.23-
பூப்பந்து விளையாட்டை விட கால்பந்து வளர்ச்சிக்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதாக நிலவும் கருத்து சரியல்ல என இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சமூக விளையாட்டு நிதிக்கு வரப்பெற்ற 2 ஆயிரத்து 402 விண்ணப்பங்களில், 905 பூப்பந்து தொடர்பானவை என்றும், கால்பந்து சார்ந்து 362 மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தரவுகளைச் சுட்டிக் காட்டினார். இது, சமூக அளவில் பூப்பந்துக்கான அதிக ஆர்வத்தையும், அதன் செயலூக்கமான ஈடுபாட்டையும் நிரூபிக்கிறது என்று அவர் விளக்கினார்.
பூப்பந்து நிகழ்வுகளுக்கான மொத்தச் செலவு 903 ஆயிரம் ரிங்கிட்டாக இருந்த போதிலும், கால்பந்து நிகழ்வுகளுக்கான செலவு 3.6 மில்லியன் ரிங்கிட்டாக உள்ளது. இது பூப்பந்து நிகழ்வுகளைக் குறைந்த செலவில் அதிகமாக நடத்த முடியும் என்பதைக் காட்டுவதாக அவர் கூறினார். மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதும் நாட்டிற்குப் பதக்கங்களைக் கொண்டு வரும் பூப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், வடக்கு பகுதிக்கானப் பூப்பந்து பயிற்சியகம் அமைக்கும் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.








