பிரேசில், ஆகஸ்ட்.18-
இன்று அதிகாலை, வாஸ்கோ டா காமாவிடம் 6-0 என்ற கோல் கணக்கில் சாண்டோஸ் தோல்வியடைந்ததால், பிரேசிலிய நட்சத்திரம் நெய்மார் கண்ணீர் விட்டு அழுதார். அவரது தொழில் வாழ்க்கையில் அது மிக மோசமானத் தோல்வியாகும்.
33 வயதான நெய்மார், காயம் காரணமாக சவுதி அரேபியாவில் அல்-ஹிலாலுடன் 18 மாதங்களாக கடினமான காலக் கட்டத்திற்குப் பிறகு இவ்வாண்டு தொடக்கத்தில் தனது பழைய கிளப்பான சாண்டோஸில் மீண்டும் இணைந்தார்.
தனது தாய்நாட்டிற்குத் திரும்பியதிலிருந்து, நெய்மர் 19 ஆட்டங்களில் ஆறு கோல்களை அடித்துள்ளார் மற்றும் மூன்று முறை கோல்களை அடிக்க உதவியுள்ளார். ஆனால் சாண்டோஸ், பிரேசிலின் முக்கிய லீக்கில் 15 வது இடத்தில்தான் உள்ளது.
வாஸ்கோ டா காமாவிடம் படுதோல்வி கண்ட பிறகு, நெய்மார் மைதானத்தில் அழுது கொண்டே இருந்ததைக் காண முடிந்தது. பின்னர் பயிற்சியாளர்கள் ஆறுதல் கூறினர். அவர் பின்னர் சுரங்கப் பாதைக்குச் சென்று தனது ஜெர்சியால் கண்ணீரைத் துடைத்தார்.
இந்தத் தோல்வி, அவரது தொழில் வாழ்க்கையின் மோசமான தோல்வியின் முந்தைய சாதனையை மிஞ்சியது. 2015ந்தில் லா லீகாவில் செல்டா விகோவிடம் பார்சிலோனா 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது இதற்கு முன் அவரது மோசமான தோல்வியாக இருந்தது.