ஜொஹன்னஸ்பெர்க், நவம்பர்.21-
மலேசிய கால்பந்து சங்கமான FAM மற்றும் ஏழு வெளிநாட்டுப் பாரம்பரிய கால்பந்து வீரர்கள் பதிவு செய்யப்பட்ட முறை தொடர்பாக நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரம் மூடி மறைக்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது என்று விவரித்த பிரதமர், இவ்விவகாரம் முறையான நடைமுறைகள் வாயிலாகத் தீர்க்கப்படும் என்பதை உறுதிக் கூறினார்.
நேற்று வியாழக்கிழமை எத்தியோப்பியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் மலேசிய ஊடகங்களிடம் பேசிய டத்தோ ஶ்ரீ அன்வார், இந்த விவகாரத்தை அமைச்சரவை முழுமையாக விவாதித்ததாகவும், இதனை மூடி மறைக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளதாகவும் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
உலக கால்பந்து சம்மேளனமான FIFA-வின் நம்பகத்தன்மை குறித்து அரசாங்கத்திற்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று அன்வார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் இவ்விவகாரத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோவின் நிலைப்பாடு சரியானது என்று பிரதமர் தற்காத்துப் பேசினார்.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வீரர்களின் ஆவணங்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு ஸ்பெயினில் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா? என்பதுதான் முக்கியக் கேள்வியாகும் என்று பிரதமர் விளக்கினார்.
மலேசிய தேசிய அணியைச் சேர்ந்த அந்த ஏழு வெளிநாட்டு கால்பந்து வீரர்களின் மூதாதையர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்று மலேசிய கால்பந்து சங்கம் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்றும், மோசடி நடந்துள்ளது என்றும் FIFA கண்டுபிடித்ததைத் தொடர்ந்து மலேசிய கால்பந்து சங்கத்திற்கும், அந்த 7 வீரர்களுக்கும் உலக கால்பந்து சம்மேளனத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த 7 வீரர்களும் எந்தவோர் அணியையும் பிரதிநிதித்து விளையாடுவதற்கு 12 மாதக் காலத்திற்கு FIFA தடை விதித்துள்ளது.
இவ்விவகாரத்தில் மலேசிய கால்பந்து சங்கம், சொந்தமாகத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
FAM குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்ட போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் பதில் அளித்தார்.








