ஷா ஆலாம், ஆகஸ்ட்.16-
2026 சுக்மா போட்டியை சிலாங்கூர் மாநில அரசு ஏற்று நடத்துகிறது. அதனையொட்டி இன்று ‘2026 ரோட் டூ சாம்பியன்’ திட்டத்தின் அறிமுக விழா நடைபெற்றது. அதே சமயம் சுக்மாவின் சிலாங்கூர் அணிக்கான தத்தெடுப்புத் தந்தை திட்டத்திற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வும் ஒரு சேர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நிகழ்வில் கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் 2026 சுக்மா போட்டியின் சிலம்பம் விளையாட்டுக்கான தத்தெடுப்புத் தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

சிலம்பம் விளையாட்டுக்கான தத்தெடுப்புத் தந்தையாகத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்வதாக பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார். கோத்தா கெமுனிங் சட்ட மன்றம் சிலம்ப விளையாட்டுக் குழுவினருக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும். பயிற்சி தொடங்கி போட்டி நடைபெறும் வரை முழு கடப்பாட்டுடன் வலுவான ஊக்குவிப்பு வழங்கும் என பிரகாஷ் சம்புநாதன் உறுதியளித்தார்.

2026 சுக்மாவில் தொடக்கத்தில் சிலம்பம் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்ட தரப்புகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அவ்விளையாட்டு இறுதியில் பட்டியலிடப்பட்டது. 2026 சுக்மா போட்டி சிலாங்கூரில் ஒன்பது மாவட்டங்களில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.