தோக்கியோ, ஜூலை.19-
நாட்டின் மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனைகள் பெர்லி டான்-எம்.தீனா ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளனர். அரையிறுதியில் அவ்விருவரும் உலகின் இரண்டாம் நிலை ஜோடியான ஜப்பானின் நாமி மட்சுயாமா-ஷிஹாரு ஷிடாவுடன் களம் கண்டனர்.
அவ்வாட்டத்தில் பெர்லி டான்-எம்.தீனா நேரடி செட்களில் ஜப்பானிய இணையை வீழ்த்தினர். அவ்வாட்டத்தைத் தன் வசப்படுத்த உலகின் அந்த மூன்றாம் நிலை ஜோடிக்கு 36 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டன. இதற்கு முன் அவ்விரு தரப்புகளும் களமிறங்கிய 14 ஆட்டங்களில் மலேசிய ஜோடிக்கு 13 ஆட்டங்களில் தோல்வியே மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.
இப்பருவத்தில் பெர்லி டானும் எம்.தீனாவும் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெறுவது இது நான்காவது முறையாகும். நாளைய இறுதியாட்டத்தில் அவர்கள் சீன வீராங்கனைகளுடன் மோதவுள்ளனர்.