ஷா ஆலாம், ஆகஸ்ட்.08-
2026 ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டுப் போட்டியான சுக்மாவில் இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று 3 இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள், சிலாங்கூர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜார்ஜ் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
விளையாட்டு வகைகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் அரசாங்கம் வகுத்துள்ள அளவுகோள்களையும், பாகுபாடில்லாத அணுகுமுறையையும் சிலாங்கூர் மாநில அரசு உறுதியாகப் பின்பற்றுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் மற்றும் மதிக்கிறோம்.
ஆனால், சிலம்பம், ஒரு பாரம்பரியத் தற்காப்புக் கலையாக இருக்க, குறிப்பாக சிலாங்கூரில் வாழும் இந்தியக் சமூகத்தினரிடையே பரவலாகப் பயிற்சி பெறப்பட்டு வருகின்ற ஒரு திறமையான கலையாகும். இதனை அங்கீகரிப்பதும், சுக்மா போட்டிகளில் இணைத்துக் கொள்வதும், இந்திய கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும், வேர்களுக்கும் மரியாதை காட்டும் செயலாகும் என்று அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
அது மட்டுமல்லாது, இது இளைஞர் தடகள வீரர்களை ஊக்குவிக்கும், ஒற்றுமையை வளர்க்கும் மற்றும் மாநிலத்தின் பல்துறை விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு வாய்ப்பாக அமையும்.
சுக்மா போட்டியில் சிலம்பத்தைப் பங்கேற்புக்கான வழியைத் திறக்க மாநில அரசை மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்வதாக பிரகாஷ் சம்புநாதன், ராஜீவ் ரிஷ்கரன் மற்றும் குணராஜ் ஜார்ஜ் ஆகியோர் சிலாங்கூர் மாநில அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.