கோலாலம்பூர், ஜூன்.24-
தேசிய ஆண்கள் ஒற்றையர் பிரிவு பூப்பந்து வீரர் லியோங் ஜுன் ஹாவ், மலேசியாவின் முதல் நிலை வீரராகத் தனது அந்தஸ்தால் அழுத்தம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மாறாக தொடர்ந்து சிறந்து விளங்க இந்த நிலை உந்துதலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உலகின் 25வது தரவரிசையில் உள்ள அவர், அந்தஸ்தால் வரும் எதிர்பார்ப்புகளை அறிந்திருப்பதாகவும், ஆனால் அதை அழுத்தமாகக் கருதவில்லை என்றும் கூறினார்.
உலகப் பூப்பந்து சம்மேளனம் BWFபின் தரவரிசையின் அடிப்படையில், ஜுன் ஹாவ் தற்போது தொழில்முறை வீரர் லீ ஸீ ஜியாவை விட உயர்ந்த இடத்தில் உள்ளார். அவர் 28வது இடத்தில் இருக்கிறார். அதைத் தொடர்ந்து ஜஸ்டின் ஹோ (43வது) மற்றும் ஐடில் ஷோலே அலி சாதிகின் (46வது) உள்ளனர்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸீ ஜியா, கணுக்கால் தசைநார் காயம் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து விளையாடவில்லை.
அடுத்த மாதம் வரை விளையாடாத ஜுன் ஹாவ், வரவிருக்கும் முக்கியமான போட்டியை எதிர்கொள்ள தனது உடல் தகுதி மற்றும் களத்தில் விவேகத்தை மேம்படுத்த இந்த இடைவேளையைப் பயன்படுத்தப் போவதாகக் கூறினார்.
இந்த மாதத் தொடக்கத்தில் கடைசியாக 2025 இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டியில் விளையாடிய அவர், ஆகஸ்ட் 25 முதல் 31 வரை பாரிஸில் நடைபெறும் 2025 உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கு முன்பு 2025 ஜப்பான் பொது பூப்பந்து போட்டி (ஜூலை 15 முதல் 20 வரை) மற்றும் சீன பொது பூப்பந்து போட்டி (ஜூலை 22 முதல் 27 வரை) ஆகியவற்றில் மீண்டும் விளையாடவிருப்பதாகக் கூறினார்.








