Oct 19, 2025
Thisaigal NewsYouTube
‘ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார்’ - சிறுவயது பயிற்சியாளர் சொல்லும் காரணம்!
விளையாட்டு

‘ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார்’ - சிறுவயது பயிற்சியாளர் சொல்லும் காரணம்!

Share:

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்டுவரும் ரோகித் சர்மா, விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதை பார்க்கலாம் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை பார்த்த கேப்டன்களில் ரோகித் சர்மாவின் பெயர் தனித்து நிற்கிறது. அவர் சக வீரர்களுடன் அணுகும்முறை, அணியை கட்டமைக்கும் முறை மற்றும் அணிக்காக கோப்பை வெல்லவேண்டும் என்ற முன்னெடுப்பு என அனைத்து பாக்ஸ்களையும் வெற்றிகரமாக டிக்செய்துவருகிறார்.

உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் எது என்று கேட்டால், இந்திய அணிக்காக கோப்பை வெல்லவேண்டும் என்ற பதில்தான் ரோகித் சர்மாவிடமிருந்து முதல் பதிலாக வெளிவரும். அவரை பொறுத்தவரை தன்னுடைய தனிப்பட்ட சாதனையை விட, ஓய்வுபெற்ற பிறகு இந்திய அணியின் கேப்டனாக எத்தனை கோப்பைகளை வைத்திருக்கிறேன் என்பதே பெரிய விசயம் என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதன்படி 2023 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியாவிற்காக வெல்லவேண்டும் என்ற வேட்கையில் இருந்த ரோகித் சர்மா நூலிழையில் தவறவிட்டார். ஆனால் ஒருநாள் உலகக்கோப்பையை விட்டாலும் 2024 டி20 உலகக்கோப்பையை கேப்டனாக வென்ற ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி பெயரை தடம்பதித்தார்.

india t20 world cup 2024

024 டி20 உலகக்கோப்பையை வென்றபிறகு டி20 வடிவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோகித்சர்மா, தன்னுடைய அடுத்த இலக்குகளாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2025 சாம்பியன்ஸ் டிரோபி, 2027 ஒருநாள் உலகக்கோப்பைகளை வைத்துள்ளார்.

இந்நிலையில், எப்படி டி20 உலகக்கோப்பை வென்றபிறகு டி20 வடிவத்திலிருந்து ஓய்வு பெற்றாரோ, அதேபோல 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவார் என அவருடைய சிறுவயது பயிற்சியாளர்தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறலாம்..

ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளரான தினேஷ் லாட், டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து நட்சத்திர பேட்டரின் ஓய்வு குறித்து திறந்து வைத்தார். 37 வயதான ரோகித் சர்மா,டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஓய்வை அறிவிக்கும் முக்கியமான இடத்தில் இருப்பதாக லாட் தெரிவித்தார்.

டைனிக் ஜாக்ரான் உடன் பேசியிருக்கும் தினேஷ் லாட்,“2025 உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் வடிவத்திலிருந்து விலகிவிடுவார் என்று நான் உறுதியாக கூறவில்லை. இருப்பினும், வளர்ந்து வரும் அவருடைய வயதின் காரணமாக டெஸ்ட் வடிவத்திற்கு விடைகொடுக்க வாய்ப்புள்ளது. அவர் டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் 50ஓவர் கிரிக்கெட் வடிவத்திற்கு தகுதியுடன் இருக்கவேண்டும் என்பதற்காக, ரோகித் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு வெளியேறலாம். 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோகித் நிச்சயம் விளையாடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தற்போது அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்” என்று தெரிவித்தார்.

Related News