சுங்கை பட்டாணி, டிசம்பர்.28-
சுங்கை பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவில் சுமார் 10 மில்லியன் ரிங்கிட் செலவில் அதிநவீன விளையாட்டு வளாகம் ஒன்று அமையவிருப்பதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜொஹாரி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாவட்டத் தகவல் அலுவலகத்திற்கு அருகே அமையவுள்ள இந்த பிரம்மாண்ட வளாகம், இப்பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் புதிய தடகள வீரர்களை உருவாக்கவும் ஒரு முக்கிய மையமாகத் திகழும் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது கனவுத் திட்டமான இதனை, பொதுப்பணித் துறையுடன் இணைந்து மிக விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இதற்கான தொடக்கக் கட்ட நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார். அமைச்சராகப் பொறுப்பு வகித்தாலும், வார இறுதி நாட்களில் தனது சொந்தத் தொகுதியான சுங்கை பட்டாணி மக்களுடனேயே செலவிட்டு, இப்பகுதியின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிப்பேன் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.








