மலேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை, “பறக்கும் பாவை” என்று வர்ணிக்கப்பட்டவர் ஜி. சாந்தி. வங்கியில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றி வரும் சாந்தி, மலேசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் குறித்து தமது கருத்தைத் தெரிவிப்பதிலும், அவ்வப்போது அலோசனைகளைக் கூறுவதிலும் தமது பங்களிப்பை வழங்க தவறியது இல்லை.
பேரா, கோலகங்சாரில் பிறந்த 55 வயதான சாந்தி, 1998ஆம் ஆண்டு மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதைப் பெற்று சாதனை படைத்தவர்.
1997ஆம் ஆண்டு இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியான சீ போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் தங்கம் வென்றவர். இதன்வழி தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் 14 ஆண்டுகளுக்குப் பின், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. அதன் பின்னர் தென்கிழக்காசியாவின் அதிவேகப் பெண்மணி என்று பெயரையும் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்தார் சாந்தி.
1991ஆம் ஆண்டு மணிலாவில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் அப்போதைய ஆசியாவின் அதிவேக வீராங்கனையான பிலிப்பைன்ஸ் நாட்டின் லிடியா டி வேகா என்பவரிடம் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தோற்றாலும்; 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மலேசியாவுக்குத் தங்கம் வென்றுக் கொடுத்தார். [அந்தப் போட்டியில் சாந்திக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர் இப்படி விவரித்தார்.
“100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லிடியாவிடம் தோற்றதும் என்னுடைய பயிற்றுநர்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு எனக்கு ஊக்குவிப்பு கொடுத்தார்கள். பயப்படமால் ஓடு… அப்படின்னு எனக்கு உற்சாகம் கொடுத்தார்கள். எனக்கு ஏழாவது ஓடு பாதை கிடைத்தது. அந்த ஓட்டத்தை ஓடி முடித்து தங்கப் பதக்கம் வென்றேன் என்றார்.[6
சாந்தி மேலும் விவரிக்கையில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இன்னும் ஒரு மீட்டர் தூரம் இருந்தபோது, நான் கீழே விழுந்துவிட்டேன். கையில் அடிப்பட்டு விட்டது. எனக்கு வலி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை. சந்தோஷம் மட்டும்தான் இருந்தது. மலேசியாவுக்குத் தங்கப் பதக்கம் எடுத்துக் கொடுத்த சந்தோஷம். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நான் தங்கம் எடுத்ததை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை “ என்றார்.
1993ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் 11.50 வினாடிகளில் ஓடி சாதனை ஏற்படுத்தினார். அந்தச் சாதனை 2017ஆம் ஆண்டில், 24 ஆண்டுகளுக்குப் பின்னரே முறியடிக்கப்பட்டது.
ஜி. சாந்தியின் அந்த 100 மீட்டர் சாதனையைத் தேசிய வீராங்கனை சைடாதுல் ஹுஸ்னியா சுல்கிப்லி முறியடித்தார். அதைக் கேள்விப்பட்ட ஜி. சாந்தி ’நாட்டுக்கு ஒரு சிறந்த பெண் ஓட்டக்காரர் கிடைத்து விட்டார்’ என்று கூறி மகிழ்ச்சி அடைந்தார்.
ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாந்தி அதிரடியாக மீண்டும் ஓடு களத்திற்குத் திரும்பினார். எனினும் 1998இல் தடகள விளையாட்டுப் போட்டியிலிருந்து முழுமையாக ஓய்வுப் பெறுவதாகச் சாந்தி அறிவித்தார்.
தேசிய அளவிலும் அனைத்துலக நிலையிலும் ஓட்டப்பந்தயத்தில் மலேசியாவின் பெயரையும் மலேசிய இந்தியர்களின் பெயரையும் புகழ் பெறச் செய்த பறக்கும் பாவை ஜி. சாந்தி, 1998ஆம் ஆண்டு, விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வுப் பெற்றார்.
ஒரு வங்கி அதிகாரியான கண்ணன் ராஜு என்பவரை மணம் புரிந்த சாந்திக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்தவர் வினோசனா; இளையவர் தெய்வசனா.
மூத்த மகள் வினோசனா, தற்போது கெடா, அலோர் ஸ்டார், சுல்தானா பாகியா பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இளைய மகள் தெய்வசனா, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பல் மருத்துவராகப் பணிபுரிகிறார்.
“அந்தக் காலத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில்தான் மனம் இருந்தது” என்கிறார் சாந்தி கோவிந்தசாமி என்ற ஜி. சாந்தி.
தடகள விளையாட்டாளர்களுக்கு இப்போது இருப்பதுபோல் புக்கிட் ஜாலில் விளையாட்டு அரங்கில் குளுகுளு வசதியுடன் ஒரே கூரையின் கீழ் அனைத்து வகையான பயிற்சிகளுக்கு உரிய கட்டமைப்பு வசதிகள் கிடையாது. மிகவும் சிரமான காலக்கட்டம் அது. பயிற்சிகள் பல இடங்களில் நடக்கும்.
கோலாலம்பூர், ஜாலான் செமாரக்கில் உள்ள புலாபோலில் தடகள பயிற்சிகள் நடைபெறும். தகரங்களைத் தாங்கிய கூரையின் கீழ் பயிற்சிகள் நடைபெறும்போது வெயில் கொளுத்து வாங்கும். அதன் பின்னர் ஜிம் பயிற்சிக்குக் கோலாலம்பூர், பெர்சியாரான ராஜா மூடா மூசாவில் உள்ள பயிற்சி மையத்திற்குச் செல்ல வேண்டும். மூடுந்து (van) வசதி, மகிழுந்து வசதி எதுவும் கிடையாது. ஒரு கைப்பையைத் தூக்கிக் கொண்டு பயணிகள் நெரிசல் நிறைந்த பேருந்தில் (மினி பஸ்) பயணம் செய்ய வேண்டும். மினி பஸ்ஸூக்காக வெகு நேரம் காத்திருக்க வேண்டும். மிக அலைச்சலாக இருக்கும்.
இப்படி நெருக்கடி மிகுந்த சூழலில்தான் நாங்கள் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். இப்போது அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. பயற்சியாளர்களுக்கு அலைச்சல் அதிகமாக இல்லை. அன்றைய நாளில் நாட்டைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருந்தது. வெற்றிப் பதக்கங்களையும் குவிக்க முடிந்தது என்று 12 பேர் கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளையான சாந்தி கூறுகிறார்.
ஜி. சாந்தியின் சாதனைகள்
• 1991 மணிலா தென்கிழக்காசிய விளையாட்டுகள் - 200 மீட்டர் - தங்கம்
• 1991 மணிலா தென்கிழக்காசிய விளையாட்டுகள் - 100 மீட்டர் - வெள்ளி
• 1993 சிங்கப்பூர் தென்கிழக்காசிய விளையாட்டுகள் - 100 மீட்டர் - வெள்ளி
• 1993 சிங்கப்பூர் தென்கிழக்காசிய விளையாட்டுகள் - 200 மீட்டர் - வெள்ளி
• 1993 சிங்கப்பூர் தென்கிழக்காசிய விளையாட்டுகள் - 4 x 400 மீட்டர் - தங்கம்
• 1997 ஜகார்த்தா தென்கிழக்காசிய விளையாட்டுகள் - 100 மீட்டர் - தங்கம்
• 1997 ஜகார்த்தா தென்கிழக்காசிய விளையாட்டுகள் - 200 மீட்டர் - தங்கம்
• 1997 ஜகார்த்தா தென்கிழக்காசிய விளையாட்டுகள் - 4x400 மீட்டர் - வெள்ளி
• 1998 புகுவோகா (Fukuoka) ஆசிய திடல்தடப் போட்டி - 100 மீட்டர் - வெண்கலம்
• 1998 பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 100 மீட்டர் - 4-ஆம் இடம்[7]
• 1998 பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 200 மீட்டர் - 4-ஆம் இடம்[8]