பாங்கோக், டிசம்பர்.10-
தென்கிழக்காசியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற சீ விளையாட்டுப் போட்டி தாய்லாந்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தலைநகர் பாங்கோக்கில் ராஜமங்கலா தேசிய விளையாட்டு அரங்கில் 2025 சீ விளையாட்டு போட்டி கோலாகலமாக ஆரம்பித்தது. தொடக்க விழாவில் First Green Flame தீபம் ஏற்றப்பட்டது. தாய்லாந்து மன்னர் அத்தீபத்தை ஏற்றி வைத்தார்.
800 ஆளில்லா விமானங்கள் வானில் வட்டமிட்டு 2025 ஆம் ஆண்டு தாய்லாந்து சீ போட்டியின் சின்னத்தை ஒளிரச் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை அப்போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. ஆசியான் மற்றும் உலக நாடுகளில் இருந்து கிட்டதட்ட 75 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இவ்வாரத் தொடக்கத்தில் இருந்து சில போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தனது அணியை அங்கு அனுப்பியுள்ள மலேசியா 200 பதக்கங்களுக்குக் குறி வைத்துள்ளது.








