புதுடில்லி, ஆகஸ்ட்.21-
ஐக்கிய அரபு சிற்றரசில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என்று மத்திய விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 9 ஆம் தேதி 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு சிற்றரசில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா விளையாடுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், மத்திய விளையாட்டு அமைச்சு, இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் விளையாடும் என்பதை இன்று தெளிவுபடுத்தி உள்ளது.
அத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி, ஐக்கிய அரபு சிற்றரசுக்குச் செல்கிறது. இந்த தொடரில் பாகிஸ்தானுடன் மற்ற 7 அணிகளும் விளையாட உள்ளதால், இந்திய அணி பங்கேற்பதைத் தடுக்க மாட்டோம் என்று விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்தியாவிலும் இரு தரப்பு போட்டிகளில் கலந்து கொள்வதைத் தடை செய்யும் புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் நடந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இரு தரப்பு போட்டிகளில் விளையாட அனுமதிக்காது. இந்த கொள்கை உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.