சுபாங் ஜெயா, அக்டோபர்.25-
மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவைப் பிரதிநிதித்துப் பங்கேற்ற 7 கலப்பு பாரம்பரிய கால்பந்து வீரர்கள் குடியுரிமை தொடர்பாக அனைத்துலக கால்பந்து சம்மேளமான FIFA ( பீபா )- விடம் பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்கு மலேசிய கால்பந்து சங்கமான FAM- ( எப்.ஏ.எம்) தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுக்தான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
இந்த சர்ச்சைக்கு எப்.ஏ.எம் பொதுச் செயலாளர் நோர் அஸ்மான் ரஹ்மான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று துங்கு இஸ்மாயில் குறிப்பிட்டார்.
அந்த 7 கலப்பு பாரம்பரிய கால்பந்து வீரர்கள் விவகாரம் தொடர்பான ஆணவங்களில் கையெழுத்திட்டதில் அதிகமானவர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று அவர் விளக்கினார்.
எப்.ஏ.எம்மின் தலைமை நிர்வாக செயல்முறை அதிகாரி உட்பட இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று டோர்செட் கிராண்ட் சுபாங் ஹோட்டலில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துங்கு இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.
ஃபிஃபாவின் ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் மலேசியா சார்பாக களம் இறக்கப்பட்ட 7 கலப்புப் பாரம்பரிய வீரர்களின் பின்னணி தொடர்பில் எப்.ஏ.எம், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
ஏழு வீரர்களின் தாத்தா பாட்டி, மலேசியர்கள் என்று கூறுவதற்கு போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அவர்கள் ஸ்பெயின், அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நெதர்லாந்தில் பிறந்தவர்கள் என்று குறிப்புகள் காட்டுவதாகவும் ஃபிஃபா கண்டுபிடித்துள்ளது.








