பரமக்குடி, நவம்பர்.22-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காரடர்ந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த குருநாதன்-கவிதா ஆகியோரின் மகள் குரு அனுஸ்ரீ, பரமக்குடி ஏ.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த நான்கு வருடமாக கராத்தே போட்டியில் விளையாடுகிறார்.

கடந்த வாரம் கீழக்கரை அல்பாயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றார். இதுவரை 30 பதக்கம் பெற்றுள்ளார்.

இவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்கு பெற்றுள்ளார். மூன்று முறை மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வானார். ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. குரு அனுஶ்ரீ மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கிண்ண போட்டியில் கராத்தேவைச் சேர்க்க வேண்டும் எனவும் துணை முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெறவும் விரும்புகிறார்.









