கோலாலம்பூர், அக்டோபர்.31-
சுபாங் ஜெயாவைச் சேர்ந்த ஒரு மருத்துவரான 40 வயது டாக்டர் தர்ஷினி தங்கதுரை, சிறப்பு வாய்ந்த அனைத்துலக உடற்கட்டமைப்பாளர் சம்மேளனத்தின் Pro Card - சான்றிதழ் பெற்ற முதல் மலேசிய தொழில்முறை உடற்கட்டமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Pro Card - a certification என்பது ஒரு உடற்கட்டமைப்பாளர் தொழில்முறை அந்தஸ்துக்கு அதிகாரப்பூர்வமாக மாறுவதைக் குறிக்கும் மிகப் பெரிய அந்தஸ்துக்கு உரிய ஒரு சான்றிதழாகும்.
இந்தச் சாதனையின் மூலம், டாக்டர் தர்ஷினி, இப்போது தொழில்முறை ரீதியாக அனைத்துலக உடற்கட்டமைப்பாளர் சம்மேளனத்தின் புரோ லீக் போட்டிகளில் போட்டியிட முடியும்.
இதன் மூலம் மிக உயர்தரமான வருடாந்திர உடற்கட்டமைப்பாளர் மற்றும் உடற்தகுதி போட்டியான ஒலிம்பியாவில் (Olympia ) போட்டியிடுவதற்கான கதவை மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் தர்ஷினிக்குத் திறந்துள்ளது.
கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி தென் கொரியாவின் Gyeonggi-யில் நடைபெற்ற அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உடற்கட்டமைப்பாளர் அமைப்பான தேசிய உடலமைப்புக் குழு ஏற்பாடு செய்த அனைத்துலக உடற்கட்டமைப்பாளர் சம்மேளனத்தின் தகுதிப் போட்டியில் பங்கேற்ற பிறகு அவர் தனது புரோ கார்டைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
டாக்டர் தர்ஷினி தனது பிரிவில் உள்ள மற்ற நான்கு முன்னணி விளையாட்டு வீரர்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.








