சைபர்ஜெயா, அக்டோபர்.12-
அனைத்துலக நிலையிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு 50 விழுக்காடு வருமான வரிவிலக்கு அளிக்கப்படும் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ அறிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்த 2026-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் படி, 'மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026'-ஐ முன்னிட்டு சுற்றுலா, விளையாட்டுத் துறை ஆகியவற்றை மேம்படுத்த இந்தச் சலுகை வழங்கப்படுகிறதாக ஹன்னா குறிப்பிட்டார்.
முன்னதாக 10 விழுக்காடாக இருந்த வரிச் சலுகை இப்போது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இது உலகத் தரத்திலான விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதாக மலேசியாவிற்கு ஈர்க்கும் வியூகமாக அமையும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
எனினும், நாட்டின் நற்பெயரைக் காக்க, எந்தவோர் அனைத்துலக நிலையிலானப் போட்டிக்கும், அதன் ஏற்பாட்டாளர்கள் இளைஞர், விளையாட்டு அமைச்சிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.