கோலாலம்பூர், செப்டம்பர்.02-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற உலகத் தரத்திலான பேட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று மலேசியா வரலாறு படைத்தது மூலம் மலேசியா வகுத்திருந்த ஆர்டிஜி RTG எனப்படும் ரோட் டு கோல்ட் திட்டத்தின் மகிமை குறித்து இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ பெருமிதம் தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மலேசியா குறைந்தபட்சம் ஒரு தங்கத்தையாவது வென்று வரலாறு படைக்க வேண்டும் என்ற நோக்கில் வகுக்கப்பட்ட ஆர்டிஜி திட்டத்தின் முதலாவது மகத்துவமான வெற்றியாக பாரிஸ், சாம்பியன்ஷிப் பட்டத்தை மலேசியா வென்றதைப் பார்க்க முடிகிறது என்று ஹன்னா இயோ புகழாரம் சூட்டினார்.
பாரிஸ் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியாவின் பேட்மிண்டன் விளையாட்டின் கலப்பு இரட்டையரான சென் தாங் ஜீ-தோ ஈ வெய் ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்ற வேளையில் மகளிர் பிரிவில் இரட்டையரான பெர்லி டான்-எம். தீனா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்று மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களின் வெற்றியானது, ஆர்டிஜி திட்டத்திற்கு அரசாங்கம் வழங்கி வரும் நிதிக்கு பலன் கிட்டியிருப்பதைப் பார்க்க முடிவதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.