ஈப்போ, ஆகஸ்ட்.26-
அண்மைய காலமாக நல்லிணக்கத்தைச் சேதப்படுத்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள போதிலும், நிலைமையை மேம்படுத்த எப்போதும் முயற்சிக்கும் பல்வேறு தரப்பினர் இருக்கவே செய்கின்றனர்.

அத்தகையத் தரப்பினரில் பேரா மாநில சீக்கியர் சங்கமும் ஒன்றாகும். இதுநாள் வரை கட்டிக் காக்கப்பட்டு வரும் ஒற்றுமையை மறுபடியும் மலரச் செய்வதற்கு பேராக் சீக்கியர் சங்கம், விளையாட்டை ஒரு தளமாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்த உன்னத நோக்கத்திற்காக ஈப்போ, தாமான் பொட்டானியில் பேரா சீக்கியர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு விளையாட்டு அகாடமியை அமைத்து அனைத்து இனத்தவர்களுக்கும் இலவசமாகத் திறந்து விடப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டத்தோ குர்ஜீட் சிங் கூறுகிறார்.

விளையாட்டு என்பது அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தளமாகும், அதனால்தான் நாங்கள் இந்த அகாடமியை நடத்துகிறோம் என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்கிறார் டத்தோ குர்ஜீட் சிங்.

நாங்கள் மைதானத்தை வாடகைக்கு எடுக்க வேண்டியதில்லை. எங்களுக்கென்று சொந்த மைதானம் உள்ளது. எனவே எங்களுக்கு எந்தச் செலவும் இல்லை. அனைத்து பயிற்றுனர்களும் தன்னார்வலர்கள் என்று டத்தோ குட்ஜீட் சிங்கை ஈப்போ, தாமான் பொட்டானியில் உள்ள பேரா சீக்கியர் சங்கத்தின் விளையாட்டு காம்ப்ளெக்ஸில் சந்தித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
70கள் மற்றும் 80களில், அனைத்து இனங்களும் ஒரே குடும்ப உணர்வில் ஒன்றுபட்டிருந்தன. அண்மைய காலமாக, அரசியல் காரணமாக ஒரு சிறிய பிளவு ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்ல முடியும்.

அகாடமியில் சேர மாணவர்கள் இங்கு அழைத்து வரப்படும் போது நாங்கள் அவர்களுக்கு கற்பிக்கக்கூடிய ஒரே விஷயம் இங்கே அரசியல் இல்லை. மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் அல்லது சீக்கியர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் ஒன்றுதான் என்று டத்தோ குர்ஜீட் சிங் கூறினார்.