கோலாலம்பூர், நவம்பர்.10-
குடியுரிமை தொடர்பான பிரச்சினையால், விளையாடத் தடை விதிக்கப்பட்ட தேசிய கால்பந்து அணியைச் சேர்ந்த, 7 கலப்பு பாரம்பரிய கால்பந்தாட்ட வீரர்களும், மலேசிய கால்பந்து சங்கமான ஃஎ எஎம் மீது வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
அர்ஜெண்டினா, ஸ்பெயின் போன்ற நாடுகளைப் பூர்வீகமாக கொண்ட அந்த 7 வீரர்களின் ஆவணங்களைச் சமர்ப்பித்ததில், நிர்வாகத் தவறு ஏற்பட்டுள்ளதாக ஃஎப்எஎம் ஒப்புக் கொண்டதையடுத்து அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.
இதற்காக வெளிநாட்டு வழக்கறிஞர்களை நியமித்துள்ள அவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உலக கால்பந்தாட்ட சம்மேளமான ஃபிஃபா, அவர்களுக்கு விதித்த 12 மாதத் தடை காரணமாக, 7 பேரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சிலர் வேலை இழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அந்த 7 வீரர்களைக் களமிறக்க ஃஎப்எஎம் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தது உறுதியானதையடுத்து, ஃபிஃபா அந்த 7 வீரர்களுக்கு 12 மாதங்கள் விளையாடத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








