பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.17-
ஆகஸ்ட் 25 முதல் 31 வரை பாரிஸில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியாவின் முதல் மகளிர் இரட்டையர் பதக்கத்தை வெல்லும் முயற்சியில் பேர்லி டான் மற்றும் எம். தீனா இருவரும் உத்வேகத்துடன் உள்ளனர். ஆனால் வரலாறு படைக்க அவர்களுக்கு மன உறுதி தேவைப்படும்.
மகளிர் இரட்டையர் தலைமை பயிற்சியாளர் ரோஸ்மேன் ரசாக் ஆயத்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.மேலும் மற்றொரு ஜோடியான கோ பெய் கீ மற்றும் தியோ மெய் ஜிங் ஆகியோரின் இலக்கும் தெளிவாக உள்ளது.
பேர்லி-தீனா முதல் சுற்றில் பை பெற்று ஹாங்காங்கின் சாங் ஹியு யான்-லூய் லோக் லோக் அல்லது சுவிட்சர்லாந்தின் ஜூலி ஃபிராங்கோன்வில்லே-க்ளோய் பிராண்டை இரண்டாவது சுற்றில் எதிர்கொள்வார்கள். வெற்றி அடைந்தால் இந்தோனேசியாவின் லானி ட்ரியா மாயாசாரி-சிட்டி ஃபாடியா ராமதாந்தியுடன் மூன்றாவது சுற்றில் மோத நேரிடும்.
காலிறுதி வரையிலும் அதற்குப் பிறகும் அவர்கள் தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர முடிந்தால், அரையிறுதியில் ஓர் இடம் அவர்களுக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதிச் செய்யும். மேலும் 1977 இல் போட்டி தொடங்கியதிலிருந்து உலக சாம்பியன்ஷிப் மேடையில் நிற்கும் முதல் மலேசிய பெண் இரட்டையர் ஜோடி என்ற பெருமையும் கிடைக்கும்.
உலக சாம்பியன்ஷிப் போட்டி போர்டே டி லா சேப்பல் அரங்கில் நடைபெறும். கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கின் போது பேர்லி-தீனா அங்கு போட்டியிட்டதால் அவர்களுக்கு நன்கு தெரிந்த இடமாகும். அங்கு அவர்கள் வெண்கலப் பதக்க பிளேஆஃப்பை எட்டினர்.
இருப்பினும், ரோஸ்மேன் கடந்த கால சூழ்நிலைகளை நம்ப விரும்பவில்லை. உலக சாம்பியன்ஷிப் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.