கோலாலம்பூர், செப்டம்பர்.15-
நாட்டின் சுதந்திரத்திற்குப் போராடிய கட்சி என்ற முறையில் மஇகாவின் எதிர்காலம் குறித்து எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க இயலாது என்று அதன் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பாரிசான் நேஷனலுடன் மஇகா தொடர்ந்து பயணிப்பது குறித்தும், எதிர்காலத்தில் அந்த கூட்டணியுடன் தொடர்ந்து இருப்பது குறித்தும் ஆழ்ந்து சிந்தித்தப் பிறகே முடிவு செய்யப்படும் என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

60 ஆண்டுகளுக்கு மேலான பாரிசான் நேஷனலுடன் கொண்டிருந்த உறவில் மஇகாவிற்கு அதிருப்தி உள்ளது என்பது உண்மையே. ஆனால், தொன்று தொட்டு காலம் முதல் கொண்டிருந்த உறவிலும், நட்பிலும், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று உறவை அதிரடியாக முறித்துக் கொள்ள முடியாது என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இது மஇகா மட்டும் அல்ல, இரு தரப்பு நலன் சார்ந்த விவகாரம். எனவே மஇகா எதிர்காலம் குறித்து ஆழ்ந்து, சிந்தித்து, பல விவகாரங்களைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுக்கப்படும் என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கெடா, கூலிம், பாயா பெசார் வட்டாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் மலேசிய சிலம்பக் கழகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் சுழற் கிண்ண சிலம்ப விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் முன்னாள் மேலவைத் தலைவரான டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.








