பினாங்கு, செப்டம்பர்.07-
பினாங்கில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் யுஎஸ்எம்மில் நடத்தப்பட்ட சீ விளையாட்டுக்கு முந்தைய கபடிப் போட்டியில் மலேசியா தங்கம் வென்றது. இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம், மலேசிய ஒலிம்பிக் மன்றம், மலேசிய கபடி சங்கம் ஆகியவை கூட்டாக இணைந்து அப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
மலேசியா மொத்தம் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது. இவ்வாண்டு தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுக்குத் தயாராகும் வகையில் தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இந்த கபடிப் போட்டியில் பங்கேற்றனர்.