கோலாலம்பூர், நவம்பர்.04-
மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவைப் பிரதிநிதித்து 7 கலப்பு கால்பந்து வீரர்கள் மற்றும் மலேசிய கால்பந்து சங்கமான ஃஎப்எஎம் செய்து கொண்ட மேல்முறையீட்டை அனைத்துலக கால்பந்து சம்மேளமான ஃபிஃபா தள்ளுபடி செய்து இருக்கும் நடவடிக்கையானது சட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அல்ல. மாறாக, அது அரசியல் பின்னணி நோக்கத்தைக் கொண்டது என்று ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் உண்மையான அம்சங்களைப் பயன்படுத்தாமல் கால்பந்து வீரர்களை நேரடியாக ஃபிஃபா தண்டித்துள்ளது என்று துங்கு இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
ஆவணங்களைப் போலியாக்கியது அல்லது போலியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது போன்றவற்றுக்கு ஃபிஃபாவின் 22ஆவது சட்டவிதியின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், கால்பந்து வீரர்கள் விவகாரத்தில் அந்த சட்ட விதி பயன்படுத்தப்படவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு ஆதரவு நல்கும் அதே வேளையில் அவர்களுக்காகக் கடைசி வரை போராடப் போவதாக இடைக்கால சுல்தான் தெரிவித்துள்ளார்.








