கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு போட்டிக்குத் திரும்பிய தேசிய வீரர் லீ ஸீ ஜியாவுக்கு நிலைமை சாதகமாக அமையவில்லை. அவர் பாரிஸில் நடைபெறும் உலகப் பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் தோல்வி கண்டார்.
அடிடாஸ் அரங்கில் நடந்த ஆட்டத்தில், உலகத் தர வரிசையில் 52வது இடத்தில் உள்ள ஸீ ஜியா, தென் கொரிய வீரர் ஜியோன் ஹியோக் ஜினிடம், 41 நிமிடங்களில் 17-21, 11-21 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் காலிறுதிக்கும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 16வது சுற்றுக்கும் முன்னேறிய பிறகு, உலக சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை விளையாடிய ஸீ ஜியாவிக்கு அத்தோல்வி ஏமாற்றத்தையே தந்தது.
உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தில் போட்டி வர்ணனையாளராக இருக்கும் முன்னாள் தேசிய ஆண்கள் ஒற்றையர் பிரிவு வீரர் டத்தோ ரஷீட் சிடெக், ஸீ ஜியா இன்னும் மேம்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.