கோலாலம்பூர், ஜூலை.12-
தேசிய மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனைகளான பெர்லி தானும் எம்.தீனாவும் பயிற்சி மற்றும் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ கேட்டுக் கொண்டுள்ளார். அவ்விருவரும் பிஏஎம் எனும் மலேசிய பூப்பந்து சங்கத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுள்ளனர். பிஏஎம்முடன் இதுநாள் வரை நீடித்து வந்த இழுபறி நிலை இறுதியாக சுமூகமாக முடிந்துள்ளதைத் தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
அவ்விருவரும் அடுத்தக் கட்டத்தை நன்கு திட்டமிட்டு நகர வேண்டும். பயிற்சிகளிலும் போட்டிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஹான்னா இயோ கேட்டுக் கொண்டார். விளையாட்டாளர்களின் நலனைத் தொடர்ந்து பேணி வரும் பிஏஎம்மின் கடப்பாட்டை அவர் பாராட்டினார்.
பெர்லி தானும் எம்.தீனாவும் ரோட் டு கோல்ட் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அதனை எதிர்கொள்ள அவர்கள் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாரவர். அவர்கள் இருவரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி வரை பிஏஎம்மில் இருப்பர்.