பிரிஸ்பேன், செப்டம்பர்.02-
உலகப் புகழ்பெற்ற கனரக குத்துச்சண்டை வீரர் ஜோ பக்னர் காலமானார். அவருக்கு வயது 75.
உலகப் பட்டத்திற்காக கனரக குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு சவால் விடுத்த முன்னாள் பிரிட்டிஷ் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான ஜோ பக்னர், 1967 ஆம் ஆண்டில் தொடங்கி, 32 ஆண்டு கால குத்துச்சண்டை வாழ்க்கையில், 83 போட்டிகளில் 69 போட்டிகளில் வென்றார்.
ஐரோப்பிய மற்றும் காமன்வெல்த் ஹெவிவெயிட் கிரீடங்களையும் வைத்திருந்த பக்னர், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் காலமானார்.
ஜோ பக்னர் இரண்டு முறை அலியுடன் கோதாவில் களம் இறங்கினார். இரண்டு முறையும் புள்ளிகளில் தோற்றார்.
அதில் ஒன்று கடந்த 1975 ஆம் ஆண்டு மலேசியா ஏற்று நடத்திய கனரக குத்துச்சண்டைப் போட்டியாகும். மெர்டேக்கா அரங்கில் நடைபெற்ற முகமது அலிக்கும், ஜோ பக்னருக்கும் இடையிலான மிகப் பரபரப்பான கனரக குத்துச்சண்டைப் போட்டி, நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு கோலாலம்பூரிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது வரலாறாகும்.