கோலாலம்பூர், பிப்ரவரி 22 -
அண்மையில் சைப்ரசில் நடைபெற்ற உலக கராத்தே சம்மேளனப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது 2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் பதக்கத்தைத் தற்காப்பதற்கான முதல் நடவடிக்கையாகக் கருதப்படுவதாக சி. ஷாமளாராணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்தப் போட்டியில் 50 கிலோ எடைக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் ஷாமளாராணி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இவ்வாண்டு கலந்துகொள்ள இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன.
இந்தப் போட்டிகள் அனைத்தும் என்னை தாய்லாந்தில் நடைபெறவுள்ள சீ விளையாட்டுப் போட்டிக்குத் தயார்ப்படுத்த உதவும்.
மேலும் 2024ஆம் ஆண்டில் உலக அளவில் பங்கேற்ற முதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது பெருமை அளிப்பதாக ஷாமளாராணி கூறினார்.
இவர் உலக கராத்தே சம்மேளனப் போட்டியில் ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த இவா எனும் விளையாட்டாளரை 9-5 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைத் தன் வசமாக்கினார்.
இந்தப் போட்டி எனக்கு மிகுந்த விழிப்புணர்வைத் தந்துள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் தயாராவதற்கு ஊக்கத்தையும் அளித்திருப்பதாக ஷாமளாராணி குறிப்பிட்டார்.
இவர் இதற்கு முன் 2021 வியட்நாம், 2023 கம்போடியா சீ விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.